வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் முதலாம் திகதி மன்னாரில் ஆரம்பிக்கப்படவுள்ளது என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் க.லவகுசராசா தெரிவித்துள்ளார்.
“கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப்பொருளில், வடக்கு கிழக்கு உட்பட 8 மாவட்டங்களில் சுழற்சி முறையில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது என அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, ”இந்த கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு வாழ் பொதுமக்கள், கிராம அடிப்படை அமைப்புகள் உட்பட பலருடைய பங்களிப்போடு மேற்கொள்ளப்படவிருக்கிறது.
குறித்த 100 நாட்கள் செயல்முனைவின் முதலாவது நாள் மக்கள் குரல் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து ஏனைய மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் இந்த கவனயீர்பு போராட்டம் இடம்பெறும்.
இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த ஜனநாயக ரீதியான போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் கலந்து கொண்டு எமக்கான அரசியல் தீர்வை வலியுறுத்துவோம்.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகார பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும்.
13 வது திருத்தச்சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகார பரவலாக்கத்துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.
இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் சிறுபான்மை தமிழ் மக்களான நாம் ஆட்சிக்கு வந்த சிங்களப் பேரினவாத பெரும்பான்மை அரசுகளின் இனவாத கொள்கைகளால் பல்வேறு வழிகளிலும் அடக்கப்பட்டு வந்துள்ளோம்.
தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் குறித்து சிந்திக்கத் தூண்டியது.
வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு மேலும், வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு, அதிகார பரவலாக்கம் என்பது இலங்கையின் அரசியலமைப்பின் அங்கமாயிருக்கிறது.
இது, சர்வதேச சமூகத்தினாலும் ஐக்கிய நாடுகள் சபையினாலும் வரவேற்கப்படுகின்ற ஒன்றாகும். ஆகவே, எமக்கான உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கும், நட்பு நாடான இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்திக்கொண்டு எமது போராட்டத்தை ஆரம்பிக்கின்றோம்” எனதெரிவித்துள்ளார்.