வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்ததாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் உயிரிழந்த 09 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ அறிக்கையில் குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அவற்றின் அடிப்படையில்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த வரப்பிரகாசம் கிளரம்மா (வயது 85),
உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக நேரடியாக பிசிஆர் உள்வாங்கப்பட்ட P.இளமுருகன் (வயது 64), ஜெயசங்கர் சுபாஜினி (வயது 47), அடையாளம் காணப்படாத ஒருவர் (அறிக்கையில் பெயர், வயது குறிப்பிடப்படவில்லை), ஆகியோரும்,
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் ஊடாக பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட,
கிருஷ்ணன் தவபாக்கியம் (வயது 73), பெரியண்ணா தங்கராசா (வயது 72), தர்மலிங்கம் மகேஸ்வரி (87) ஆகியோரும்,
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ஊடாக பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட செல்லத்துரை கந்தசாமி (வயது 67),
வவுனியா மாவட்ட வைத்தியசாலை ஊடாக பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மனோன்மணி (வயது 76) ஆகியோர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக,
இன்று காலை, யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த சங்கானையைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் உயிரிழந்திருந்தார்.
அதேவேளை,
தென்மராட்சி குடமியன் பகுதியில் வசித்துவந்த 97 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே,
வடமராட்சியிலும் இருவர் வீடுகளில் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கும் கொரோனாத் தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 100 வயதுடைய முதியவர், அல்வாயைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஆகியோரே வீடுகளில் உயிரிழந்த நிலையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.