ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்புச்சபையில் அங்கத்துவம் பெற்றிருக்கும் நோர்வே, ஐ.நா. சபையின் பாதுகாப்புச்சபையில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், குறிப்பிடப்படும் நாடுகள் மற்றும் அமைப்புக்கள் மீது பொருளாதாரத்தடைகளை நிறைவேற்றும் பணிகளை பொறுப்பேற்றுக்கொள்ள இருக்கிறது.
01.01.2021 அன்றிலிருந்து, ஐ.நா. பாதுகாப்புச்சபையில் அங்கத்துவம் வகிக்கும் நோர்வே, சுட்டிக்காட்டப்படும் நாடுகள் மற்றும் அமைப்புக்கள் மீது விதிக்கப்படும் பொருளாதாரத்தடைகளை நிறைவேற்றும் பாதுகாப்புச்சபையின் 14 குழுக்களில் இரு குழுக்களை பொறுப்பேற்றுக்கொள்ளும் எனவும், மிகவும் சிக்கலான இவ்விடயங்களை பொறுப்போடு நோர்வே கையாளுமெனவும் நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் “Ine Eriksen Søreide” அம்மையார் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழித்தழிக்கும் முயற்சியில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மற்றும் அமைப்புக்கள் மீது ஐ.நா. சபையின் பாதுகாப்புச்சபை விதிக்கக்கூடிய பொருளாதாரத்தடைகள் தொடர்பான விடயங்களை நிறைவேற்றுவதே தமது முதன்மையான பணியாகவிருக்குமெனவும் குறிப்பிட்டுள்ள நோர்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சர், குறிப்பாக வட கொரியா, “ஐ.எஸ்.” மற்றும் “அல் – கைதா” போன்றவற்றின் மீதான பொருளாதாரத்தடைகளை நிறைவேற்றுவது தமது பிரதான பணிகளாக இருந்தாலும், சிரியா போன்ற நாடுகளில் மனிதபிமான நடவடிக்கைகளை முடுக்கி விடுவதற்கான பணிகளையும் தாம் மேற்கொள்ள இருப்பதாக மேலும் தெரிவித்துள்ளார்.