வன்முறைக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கை!

You are currently viewing வன்முறைக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கை!

சுதந்திர தினத்தன்று கிளிநொச்சியில் நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, மொழி, பிராந்திய வேறுபாடின்றிக் குரல் கொடுக்க வேண்டும் என யாழ்ப்பானப் பல்கலைகக்கழக ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் (04.02.2024) ஜனநாயக ரீதியிலான‌ போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக‌ மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினைக் கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை முன்னிறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும், வடக்கினைச் சேர்ந்த பல‌ சமூக அமைப்புக்களும் சேர்ந்து நேற்று இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தன்று கிளிநொச்சியில் அமைதி வழிப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டதோடு இந்தத் தாக்குதல்களிலே நீர்த்தாரைகளும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மாணவர்களை இழுத்தும், தள்ளியும், நிலத்தில் வீழ்த்தியும் பொலிஸார் மிகவும் மோசமான முறையில் வன்முறையில் ஈடுபட்ட அதேவேளை, போராட்டத்தில் பங்குபற்றிய மாணவர்களில் சிலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

அநீதிகளை எதிர்த்தும், உரிமைகளைக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்களும், பொது மக்களும் நேற்று மேற்கொண்ட போராட்டத்தினைப் பொலிஸார் வன்முறை மூலம் நசுக்க முற்பட்ட செயலினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மாணவர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறை இலங்கையில் சுதந்திர தினத்தன்று கூட அங்கு வாழும் தமிழ் மக்களுக்குச் சுதந்திரமாக ஒன்று கூடவும், தமது உரிமைகளை வலியுறுத்திப் போராடவும் சுதந்திரம் இல்லை என்பதனை உலகுக்கு வெளிக்காட்டியுள்ளது.

வருட ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பின்னர், தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காகவும், தம்மீது தொடரும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் அமைதி வழியில் போராடி வருகின்றனர்.

காணி அபகரிப்பு, இராணுவ மயமாக்கம், சிங்கள பௌத்த மயமாக்கல், அரசியற் கைதிகளின் விடுதலை மற்றும் காணமால் ஆக்கப்பட்டோருக்கான நீதி போன்ற விடயங்களுக்காக தமிழ் மக்களின் போராட்டங்கள் வடக்கு – கிழக்கில் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்தப் பிரச்சினைகளை ஜனநாயக ரீதியில் தீர்ப்பதனைத் தவிர்த்து, தனது பெரும்பான்மைவாத வன்முறையினைத் தமிழ் மக்கள் மீது அரசு தொடர்ந்தும் ஏவி வருகிறது.

போராட்டங்களை நசுக்குவதன் மூலம் தன்னுடைய இருப்பினைத் தக்க வைக்க முடியும் என இந்த அரசாங்கம் கருதுகிறது.

மக்களின் கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கான சுதந்திரம் என்பவற்றினைச் சட்டங்கள் மூலமும், கொடூர வன்முறை மூலமும் அரசு பறித்து வருகிறது.

இந்தச் செயன்முறைகளினதும், சிங்கள பௌத்தப் பெரும்பான்மைவாதத்தினதும் ஒரு வடிவமே  போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறை ஆகும்.

சுதந்திரத்தின் அர்த்தத்தினைக் கேலிக்கூத்தாக்கும் அரசாங்கத்தின் நேற்றைய வன்முறைக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, மொழி, பிராந்திய வேறுபாடின்றிக் குரல் கொடுக்க வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைகக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகிறது.

இனப் பிரச்சினை, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி என்பவற்றுக்கு நிலைத்திருக்கக் கூடிய, நீதியான‌ தீர்வுகளைக் காண்பதே அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையினை உருவாக்கும்.

அதனை விடுத்து வன்முறையினாலும், ஒடுக்கும் சட்டங்களினாலும் மக்களின் எதிர்ப்புக் குரலினை நசுக்கலாம் என்ற அரசின் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது.

நெருக்கடி ஒன்றினை நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நாம் ஒன்றுபட்டு எம் மத்தியில் இருக்கும் ஜனநாயக வெளிகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.

இந்த வெளிகளில் நாம் பொதுமக்களாகக் கூட்டுணர்வுடனும் துணிச்சலுடனும் இயங்குவதன் மூலம் மாத்திரமே, ஜனநாயகத்தினைப் பலப்படுத்தி, அரசின் அநீதி மிக்க நடவடிக்கைகளைத் தோற்கடிக்கலாம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நம்புகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது

பகிர்ந்துகொள்ள

Leave a Reply