மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உமநகரி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப தம்பதியை தாக்கி 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 30 பவுனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் கொள்ளை இடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உமநகரி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப தம்பதியினரின் வீட்டினுல் வெள்ளிக்கிழமை அதிகாலை உள் நுழைந்த திருடர்கள் வீட்டின் கூரை ஓடுகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
மூன்று கொள்ளையர்கள் வீட்டினுள் நுழைந்த நிலையில் ஆயுதங்களால் தம்பதியினர் இரு வரை சரமாரியாக தாக்கி பணம் மற்றும் தாலிக்கொடி உட்பட 30 பவுனுக்கு மேற்பட்ட நகைகளை களவாடிச் சென்றுள்ளனர்.
பலத்த காயங்களுக்கு உள்ளான பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார்,முருங்கன், பொலிஸார் மற்றும் தடயவியல் பிரிவினர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு பார்வையிட்ட பின் முருங்கன் சிறீலங்கா காவற்துறையினர் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வீட்டில் சில வருடங்களுக்கு முன்பும் பாரிய திருட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.