இனவாத, மதவாத மேலாதிக்கச் சிந்தனை என்பது சிங்கள தேசத்தின் ஒரு பொதுப் பண்பாகவே இருந்து வருகிறது. அதுதான் அது இன அழிப்பைக் கையிலெடுக்கிறது. அதற்கு விதிவிலக்கு என்று யாருமே கிடையாது.
இதன் விளைவாகவே தமிழர் தேசம் மீதான ஒடுக்குமுறை தொடர்ந்து வருகிறது.
ஜேவிபி குறித்து இன்று நற் சான்றிதழ் வழங்குபவர்களுக்கு இதை மீளவும் நாம் நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.
தமிழர் தேசம் தொடர்பாக சிங்களத்திற்கென்று ஒரு பொதுப் பண்பு இருந்தாலும் ஒவ்வொரு சிங்களக் கட்சிகளும் / இயக்கங்களும்/ அமைப்புக்களும் தாம் வரித்துக் கொண்ட ஒரு சித்தாந்தத்தின் வழி நின்று இன ஒடுக்குதலை முன்னெடுக்கின்றன.
ஜேவிபி ஆனது 1986 இல் அதன் தலைவரான ரோகண விஜயவீர தனது மத்திய குழு உறுப்பினர்களிடையே ஆற்றிய நீண்ட உரையிலிருந்து தமிழர் விடுதலைப் போராட்டத்தை அணுகுகின்றது.
அந்த உரையில் ‘தமிழீழ விடுதலைப் போராட்டம் அடக்கி ஒடுக்கப்பட வேண்டிய ஓர் ஏகாதிபத்திய சதி’ என்பதுதான் அதன் உள்ளடக்கம்.
அந்த உரையை இன்று வரைப் மீளப் பதிப்பித்து தமது சித்தாந்தத்தை வலுப்படுத்தி வருகிறது ஜேவிபி. எளிமையாகச் சொன்னால் அந்த உரை ஜேவிபியின் பைபிள், குர்ஆன், பகவத் கீதை.
இதைப் பல தடவை மாமனிதர் தராகி சிவராம் குறிப்பிட்டுப் பேசியும் எழுதியும் வந்துள்ளார்.
இது அனுரவிற்கு செம்படிக்கும் 2 k கிட்சுகளுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஏனையோர் எப்படி மறந்தனர் என்பதுதான் புதிராக இருக்கிறது.
ஜேவிபி இதுவரை எம்மை ஒடுக்கும் ஆட்ட நாயகனாக இருக்கவில்லை. ஆனால் வெட்டி எறியும் ஒரு துருப்புச் சீட்டாக வரலாற்றில் ஒவ்வொரு தடவையும் இருந்திருக்கிறது.
சந்திரிகாவின் சமாதானப் பொதியிலிருந்து , நோர்வே அனுசரணையுடனான இடைக்கால நிர்வாக சபை , வடக்கு கிழக்குப் பிரிப்பு என்று அந்தப் பட்டியல் நீளமானது.
இப்போது துருப்புச் சீட்டுடன் சீட்டுக் கட்டையே தன் வசமாக்கியிருக்கிறது ஜேவிபி. இது மாறி வரும் புவிசார் அரசியலில் எமக்குச் சாதகமான ஒரு அம்சம்தான். ஆனால் அந்தப் புரிதலுடன் விலகி நின்று எம்மைப் பலப் படுத்த வேண்டுமே ஒழிய ஜேவிபியின் இனவாத வலைக்குள் நாம் ஐக்கியமாகி விடக் கூடாது.
தமிழர் தாயகத்தில் எந்தத் தேர்தலாக இருந்தாலும் அது தோற்கடிக்கப்பட வேண்டும்.
இப்போதைக்கு ஒரு வரலாற்றுச் சம்பவம் ஒன்றை நினைவுபடுத்தி விட்டு இந்தப் பதிவை முடிக்கிறேன்.
சந்திரிக்கா வின் கணவரான விஜய குமாரணதுங்க ஒரு சமஸ்டித் தீர்வை நோக்கி அணியமாக முன்னேறிக் கொண்டிருந்த போது ஜேவிபி அவரைப் படுகொலை செய்தது. இது வரலாறு.
‘வரலாற்றை மறந்த இனம் வாழத் தகுதியற்றது’ என்கிறது நந்திக்கடல்.
-பரணி-