யாழ் மாவட்டத்தின் நாவற்குழி பிரதேசத்தில் இன்று (3) அதிகாலை திருடர்கள் வீடு புகுந்து தாயையும், மகனையும் கட்டி வைத்து தாக்கி, வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள்.
இச் சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும், மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நாவற்குழி மேற்கிலுள்ள வீடொன்றிற்குள் நள்ளிரவில் புகுந்த திருடர்கள், வீட்டிலிருந்த தாயையும், மகனையும் கொடூரமாக தாக்கியுள்ளனர் திருடர்களின் தாக்குதலில் 17 வயதான மகனின் கை உடைந்துள்ளது 42 வயதான தாயின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்த தாயும் மகனும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
குடும்பத் தலைவரை இழந்த அந்த குடும்பம் வறுமை நிலையில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
வவுனியா – கோவில்குளம் பகுதியில், இளைஞர் குழு ஒன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில், நால்வர் காயமடைந்துள்ளனர்.
மதுபோதையில் நின்றிருந்த குறித்த நபர்கள், வீதியால் செல்பவர்களை தாக்கியதுடன், வீடுகள் சிலவற்றுக்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.
இதனால் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில், அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற அவர், நிலைமை தொடர்பாக ஆராய்ந்ததுடன், தாக்குதலை மேற்கொண்டவர்களை கைதுசெய்யுமாறு, பொலிஸாருக்கு பணித்தார்.
சிறீலங்கா காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.