வறுமையை வைத்து பெண்ணினத்தை சிறுமைப்படுத்தும் கயமைத்தனத்திற்கு கண்டனம்!

You are currently viewing வறுமையை வைத்து  பெண்ணினத்தை சிறுமைப்படுத்தும் கயமைத்தனத்திற்கு கண்டனம்!

இலங்கையின் பெண்களின் பாதுகாப்புக்காக செயலாற்றும் Unity for Women Safety Sri Lanka (UWSSL) என்ற அமைப்பாக, சமீபத்தில் ஒரு YouTube Content Creator இனால் இடம்பெற்ற அவமதிப்பு சம்பவத்தை உறுதியுடன் கண்டிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அவ் அமைப்பினரால் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

உதவிக்காக அணுகிய குடும்பத்திற்கு உதவுவதற்குப் பதிலாக, அக்குடும்பத்திலிருந்த இளம்பெண் (அந்த காணொளியின் அடிப்படையில் அவர் 18 வயது பூர்த்தி அடைந்த மாணவி ஆக இருக்கலாம்), தனது தனிமனித உரிமையையும், மரியாதையையும் காக்க விரும்பி, காணொளியில் இடம்பெற மறுத்ததைக் காரணமாக கொண்டு, அவரை அவமதிக்கும் விதத்தில் வலியுறுத்தி, அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்தினார்.

அந்த YouTuber கூறிய சில வார்த்தைகளில் சில:

“இவ என்ன ஐஸ்வர்யா இவைய காட்டித்தான் எண்ட video வ ஓட பண்ணோணுமா? வீடியோக்கு வரமாட்டியா?”

“யாரையும் லவ் பண்றியா?”

“18 வயதாகியும் இன்னும் பால்குடி மறக்கவில்லையா?”

“இப்படி நடித்தால் எனக்கு கோவம் வரும் ”

“அம்மாட கஷ்டம் தெரியாத பிள்ளை ”

இவ்வாறான நடத்தைகள் எவ்விதத்திலும் ஏற்க முடியாதவை என்றும், பெண்களின் மரியாதை, தனித்துவம் மற்றும் பாதுகாப்புக்கு எதிரானவை என்றும் அறிவிக்கின்றோம்.

பெண்களின் பாதுகாப்பும், மரியாதையும் ஏன் முக்கியம்?

பெண்கள் எப்போதும் குடும்பங்களின், சமூகவளங்களின், மற்றும் நாட்டின் தூண்களாக உள்ளனர். ஒவ்வொரு பெண்ணும், சிறுமியும், துன்புறுத்தலின்றி, பாதுகாப்புடனும், மரியாதையுடனும் வாழ உரிமை பெற்றவர்கள்.

அவர்கள் விரும்பாமலேயே வீடியோக்களில் கலந்து கொள்வதை வலியுறுத்துவது. குறிப்பாக சிறுமிகளாக இருக்கும் சந்தர்ப்பங்களில் கீழ்க்கண்ட ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும்:

சமூக அவதூறு, கேலி, மற்றும் பழிவாங்கல்

• இணையத்தில் துன்புறுத்தல் மற்றும் தொந்தரவுகள்

மன அழுத்தம், கவலை

படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு பாதிப்பு

பிரத்தியேக பாதுகாப்புக்கு ஆபத்து

• சமூகவலைத்தள பாலியல் தொந்தரவுகள்

பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களைப் பொது வெளியில் காண்பிக்க வேண்டுமா என்ற தீர்மானத்தை எடுத்துக்கொள்ள முழு உரிமையுடையவர்கள் அவர்களே. ஒருவரும் அவர்களை வற்புறுத்தவோ அல்லது அவமதிக்கவோ முடியாது.

 

எங்கள் கோரிக்கைகள்

Youtube Content Creator: பெண்கள் மற்றும் சிறுவர்களின்

தனியுரிமையை மதித்து, அவர்களின் ஒப்புதலோடு மட்டுமே செயல்படுங்கள்.

* சமூகத்துக்கு:

பொது அவமதிப்புக்கு உள்ளானவர்களை ஆதரித்து, அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு குரல் கொடுக்கவும்.

அதிகாரிகளுக்கு: இணையதள துன்புறுத்தல்களை கவனித்து, உரிய நடவடிக்கைகளை எடுக்கவும்.

ஒரு வீடியோவின் நிகழ்வு மட்டுமல்ல இது. இது இலங்கையில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்பு, மரியாதை மற்றும் உரிமைக்காக இடம்பெறும் போராட்டம்.

எங்கள் நாட்டின் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கான நீதிக்காகவும் எப்போதும் செயல்படுவோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply