வலிந்து காணாமலாக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன!

You are currently viewing வலிந்து காணாமலாக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன!

இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைக் கண்டறியும் நோக்கில் தொடர்ச்சியாகப் போராடிவரும் உறவினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகப் பல்வேறு வழிமுறைகளில் ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவது குறித்துத் தாம் கரிசனையை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா நடவடிக்கைக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா நடவடிக்கைக்குழு அதன் 48 பக்க அறிக்கையை சமர்ப்பித்திருக்கின்றது.

இவ்வறிக்கையில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் 2023 மே மாதம் – 2024 மே மாதம் வரையான காலப்பகுதியில் செயற்பாட்டுக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் தேர்தல்கள், காணி, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றின் பின்னணியில் வலிந்து காணாமலாக்கப்படல்கள், அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதன்படி இலங்கையைப் பொறுத்தமட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைக் கண்டறியும் நோக்கில் தொடர்ச்சியாகப் போராடிவரும் உறவினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகப் பல்வேறு வழிமுறைகளில் ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவது குறித்துத் தாம் ஏற்கனவே கரிசனையை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அத்தகைய ஒடுக்குமுறைச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து கிடைக்கப்பெறுவதாக ஐ.நா நடவடிக்கைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோன்று இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பதிவான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் குறித்து தாம் தொடர்ச்சியாகப் பதிவுசெய்துவருவதாகவும் அக்குழு அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் ‘இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையை வரவேற்கும் அதேவேளை, அதில் உள்ளடக்கப்பட்டிருந்த முடிவுரை மற்றும் பரிந்துரைகளை குறித்து இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்களின் பின்னரும் கூட, இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யப்படவில்லை எனவும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வதாகவும் உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது’ என்று ஐ.நா நடவடிக்கைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைப்பொறிமுறை, அதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலைப்பாடு உள்ளிட்ட விடயங்களும் சுருக்கமாக வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா நடவடிக்கைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply