வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் வடகிழக்கில் நீதிக்கான போராட்டம்!

You are currently viewing வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் வடகிழக்கில் நீதிக்கான போராட்டம்!

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதியன்று வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து டிப்போ சந்தி வரை விசேட கவனயீர்ப்புப் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், கடந்தகால மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவில்லை. அதேவேளை நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும், தமக்குரிய நீதியை நிலைநாட்டுமாறும் கோரி வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 2000 நாட்களுக்கும் மேலாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் 30ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அன்றைய தினம் கடந்த வருடங்களைப் போன்று விசேட கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 30ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாகத் திரளவுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், காலை 10.00 மணிக்கு டிப்போ சந்தியை நோக்கிப் பேரணியாகச் சென்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர், அங்குள்ள ஐக்கிய நாடுகள் சபை கிளை அலுவலகத்தின் அதிகாரிகளிடம் தமக்கான நீதியைக் கோரி மகஜரொன்றையும் கையளிக்கவுள்ளனர்.

அதன்படி ‘வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் உறவுகளினதும், ஏனைய சகல தரப்பினரதும் ஆதரவுடன் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட எமது கவனயீர்ப்புப் போராட்டம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் 2749ஆவது தினத்தைப் பூர்த்திசெய்யவுள்ள நிலையில், அன்றைய தினம் எமது போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்’ என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அதேவேளை சர்வதேச தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் வெளிவிவகார மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் எதிர்வரும் 27ஆம் திகதி நண்பகல் ஒரு மணிக்கு கொழும்பில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட இராஜதந்திரிகளும் கலந்துகொள்வர் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments