சீனாவின் சிறுபான்மையின மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக உடலுறுப்புக்களை சீனா தானமாக பெற்று வருவதாக ஐக்கியநாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது.
தமக்கு கிடைத்த நம்பகரமான தகவல்களின்படி, சீனாவில் வாழக்கூடிய, இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் சிறுபான்மையின மக்களை குறிவைக்கும் சீன அரசு, மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக உடலுறுப்புக்களை தானமாக பெற்று வருவதாக ஐக்கியநாடுகள் சபை மேலும் தெரிவித்துள்ளது. உடலுறுப்புக்கள் தொடர்பான பதிவேடு ஒன்றை கைவசம் வைத்துள்ள சீன அரசு, இவ்வாறு வலுக்கட்டாயமாக பெறப்படும் உடலுறுப்புக்கள் தொடர்பிலான விபரங்களையும் அப்பதிவேட்டில் பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, சீனாவில் வாழும் மொழி மற்றும் வழிபாட்டுமார்க்க ரீதியிலான சிறுபான்மையின மக்களே சீன அரசால் குறிவைக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கியநாடுகள் சபையின் மேற்படி தகவலை கடுமையாக மறுத்திருக்கும் சீன அரசு, மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட கைதிகளிடமிருந்து உடலுறுப்புக்களை பெற்றுவரும் நடைமுறையை சீனா பின்பற்றி வந்ததாகவும், எனினும் கடந்த 2015 ஆம் ஆண்டோடு அதனை தான் நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளதோடு, தற்போதைய ஐக்கியநாடுகள் சபையின் கூற்று ஆதரமில்லாதது எனவும் கூறியுள்ளது.