வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான மயானத்தில் கொரோனா நோய்தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்கள் எரியூட்டப்பட்டுவருகின்றது.
அதனை எரியூட்டும் போது வெளிச்செல்லும் புகையால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த மயனாத்தில் எரிவாயு மூலம் சடலங்களை எரியூட்டுவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் சடலங்களை எரியூட்டும் போது அதன் புகை வெளியேறுவதற்காக பொருத்தப்பட்டுள்ள புகைபோக்கும் கோபுரம் உயரம் குறைவாக காணப்படுவதால் அதனூடாக வெளிச்செல்லும் புகை அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குசெல்வதுடன்,அந்த வீதியினை பயன்படுத்துபவர்களிற்கும் அசௌகரியங்களை ஏற்ப்படுத்துகின்றது.
இதனால் குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசும் நிலையும் காணப்படுகின்றது. எனவே குறித்த புகைபோக்கும் கோபுரத்தினை தற்போது இருக்கும் உயரத்தினை விட மேலும் அதிகரிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.