வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் தனியார் பத்திரிகையொன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர் மீது தலைக்கவசம் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சம்பவம், நேற்று (17.06.2024) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த சில நாட்களாக வவுனியா ஊடக அமையம் மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பாக முகநூலில் அவதூறு பரப்பிவரும் சம்பவம் தொடர்பாக சுமுகமான தீர்வு ஒன்றை எட்டுவதற்காக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் குடியிருப்பு பூங்காவில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் அவதூறு பரப்பிய நபரும் கலந்து கொண்டிருந்தார். இதன்போது வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றபோது திடீரென உணர்ச்சிவசப்பட்ட அவர் குறித்த பத்திரிகை ஊடகவியலாளர் மீது தலைக்கவசம் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனையடுத்து, காயமடைந்த ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அங்கிருந்த பெண் ஊடகவியலாளரையும் தள்ளி வீழ்த்தியதுடன் அவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்ற வேளையில், அருகில் இருந்த ஊடகவியலாளர்கள் அதனை தடுத்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா சிறீலங்கா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.