வவுனியாவில் மேலும் 121 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், மூவர் மரணமடைந்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று இரவு வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 121 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், கோவிட் தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த வெளிக்குளம் பகுதியில் (வயது 52) பெண் ஒருவரும், வைரவபுளியங்குளம் பகுதியில் (வயது 85) ஆண் ஒருவரும், கோவில்புதுக்குளம் பகுதியில் (வயது 91) பெண் ஒருவரும் என 3 பேர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் மரணித்த 3 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யச் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் 54 வயது ஆண் ஒருவரும் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.