வவுனியா மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் 1055 நாட்களாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே கா.ஜெயவனிதா இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “இரண்டாம் மாடி விசாரணை பிரிவிற்கு இம்மாதம் 13ஆம் திகதி 10 மணிக்கு விசாரணைக்கு வருமாறு எனக்கும் எனது கணவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இத்துடன் மூன்றாவது தடவை என்னை விசாரணைக்காக அழைத்திருக்கின்றார்கள். முதல் இரு தடவையும் என்னை தனியாக கூப்பிட்டிருந்தார்கள். இப்போது எனது கணவனையும் வருமாறு அழைத்திருக்கின்றார்கள். இதனை நான் ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்தியே செல்ல விரும்புகின்றேன்.
சர்வதேசத்தின் கவனத்திற்கு இப்போராட்டம் எடுக்கப்பட்டு வரும் நிலையில் என்னை விசாரணைக்கு அழைப்பார்கள். கடந்த வருடமும் இவ்வாறே நடந்தது” என மேலும் தெரிவித்தார்.