“கொரோனா” பரவலால் ஐரோப்பா முழுவதுமே களையிழந்து போயுள்ள நிலையில், மக்கள் கூட்டமாக சேர்வது பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஒருவரிலிருந்து இனொருவருக்கு “கொரோனா” வைரஸ் தொற்றுவதை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடைமுறைகள் கையாளப்படுகின்றனவெனினும், நோர்வேயில் தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகளை தடையில்லாமல் நடத்துவதற்கான புதிய வழிமுறைகள் கையாளப்படுகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆராதனைகள் சில தேவாலயங்களில் “Drive – In” முறையில் நடத்தப்பட்டுள்ளன. அதாவது, ஆராதனைகளுக்காக தேவாலயங்களுக்கு வரும் மக்கள், மைதானம் போன்ற பெரிய இடங்களுக்கு வரவழைக்கப்பட்டு, அனைவரும் தத்தமது வாகனங்களிலேயே அமர்ந்திருக்கும்போது, மதகுருக்கள் ஆராதனைகளை நடாத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, மக்கள் நெருக்கமாக இல்லாமலும், ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளாமலும் பார்த்துக்கொள்ளப்பட்டதோடு, ஆராதனைகளும் தடையில்லாமல் நடாத்தப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.