வாகனங்களை செலுத்தும்போது, கைத்தொலைபேசிகளை கைகளில் வைத்திருப்பவர்களுக்கான தண்டனைகள், 01.01.2021 முதல் கடுமையாக்கப்பட இருக்கின்றன.
புதிய கடுமையான சட்டங்களின்படி, வாகனம் செலுத்தும்போது, கைகளில் கைத்தொலைபேசியை வைத்திருந்தால் 5000 குறோணர்கள் தண்டப்பணமாக அறவிடப்படுவதோடு, 3 தண்டனைப்புள்ளிகளும் தண்டமாக வழங்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
தற்போதுள்ள தண்டனை சட்டத்தின்படி, இந்த குற்றத்துக்கான தண்டனையாக 1700 குறோணர்கள் தண்டம் அறவிடப்படுவதோடு, 2 தண்டனைப்புள்ளிகள் வழங்கப்படுகின்றது. எனினும், இக்குற்றச்செயல் குறைவடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீவீன கைத்தொலைபேசிகளில் “இடையூறு செய்யவேண்டாம் / Do not disturb” என்ற வசதி இருப்பதால் அதனை செயல்நிலையில் வைப்பது வரவேற்கப்படுகிறது. இந்த வசதி செயல்நிலையில் இருக்கும்போது, வாகனங்கள் அசைவதை கணித்துக்கொள்ளும் கைத்தொலைபேசிகள், தாமாகவே “இடையூறு செய்யவேண்டாம் / Do not disturb” நிலைக்கு சென்றுவிடுவதால், கைத்தொலைபேசிக்கு வரும் அழைப்புக்கள் தாமாகவே துண்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகனங்களில் இப்போது “Bluetooth” வசதிகள் சாதாரணமாக இருப்பதால், கைத்தொலைபேசிகளை வாகனங்களிலுள்ள “Bluetooth” உடன் இணைத்து பாவிக்கலாம் என்பது அனுமதிக்கப்பட்டுள்ளது என்றாலும், வாகனங்களை செலுத்தும்போது கூடுமானவரை தொலைபேசி உரையாடல்களை தவிர்த்துக்கொள்வதே நல்லதென அறிவுறுத்தப்படுகிறது.
இதேவேளை, வாகனத்திலுள்ள “Bluetooth” இணைப்போடு கைத்தொலைபேசி இணைக்கப்படும்போதும் “இடையூறு செய்யவேண்டாம் / Do not disturb” நிலைக்கு கைத்தொலைபேசிகள் சென்றுவிடுவதும் குறிப்பிடத்தக்கது.