நோர்வே, ஒஸ்லோவில், வீதியோரமாக சென்ற 13 வயது சிறுவனை, வேகமாக வந்த வாகனமொன்று மோதியதால் சிறுவன் கடுமையான பாதிப்புக்களோடு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவசர சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஒஸ்லோ காவல்துறை அறிவித்திருந்தது.
அளவுக்கதிகமான வேகத்தில் வந்த குறித்த வாகனம் சிறுவனை மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன், நேரெதிராக வந்த இன்னொரு வாகனத்தின்மீது வீழ்ந்ததில் படுகாயமடைந்திருந்தான்.
இதேவேளை, சிறுவனை முதலில் மோதிய வாகனம் அங்கு நிற்காமல் ஓடிமறைந்ததாக முதலில் தெரிவித்திருந்த ஒஸ்லோ காவல்துறை, அவ்வாகனத்தின் சாரதியை பின்னிரவில் கைது செய்துள்ளதோடு, சம்பந்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
விசாரணைகளின்போது, குறித்த வாகனத்தின் சாரதி, போதையில் வாகனத்தை செலுத்தியிருப்பதாக தெரிய வந்துள்ளதாக கூறியிருக்கும் காவல்துறை,
- போதையில் வாகனத்தை செலுத்தியமை…
- அதிவேகத்தில் வந்து சிறுவனை மோதியமை…
- காயமடைந்த சிறுவனுக்கு தேவையான அவசர உதவிகளை வழங்காமல் அவ்விடத்தை விட்டு சென்றமை…
ஆகிய குற்றங்கள் சாரதிமீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேற்படி சிறுவனின் தற்போதைய நிலை தொடர்பில் மாறுபட்ட செய்திகள் வந்தாலும், காவல்துறை சார்பிலோ அல்லது சிறுவனின் நிலைமை தொடர்பில் தகவல்களை வழங்கும் உரித்துடையவர்களிடமிருந்தோ இதுவரை எதுவித தகவல்களும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(செய்தி மேம்பாட்டுக்காக காத்திருக்கிறோம்….)
செய்தி மேம்பாடு (19.12.2020 / 01:12)
வாகனத்தால் மோதப்பட்ட மேற்படி சிறுவன் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வேயில் வாழும் ஈழத்தமிழ் பின்னணியைக்கொண்ட குறித்த சிறுவனின் குடும்பத்தினருக்கு “தமிழ்முரசம்” குடும்பம் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதோடு, மகனை பிரிந்து துயருறும் அவர்களோடு துயர்களை பகிர்ந்துகொள்கிறது…..