உலகப்புகழ் பெற்றதும், சுவீடனின் பழம்பெரும் வாகன உற்பத்தி நிறுவனமுமான “வொல்வோ / Volvo” நிறுவனம், சுவீடனிலுள்ள தனது வாகன உற்பத்திச்சாலையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் சுவீடன் முழுவதிலுமுள்ள இந்தினுவனத்தின் 45.000 பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர், சுவீடனின் “வொல்வோ / Volvo” நிறுவனமும், சுவீடனின் புகழ்பெற்ற இன்னொரு வாகன உற்பத்தி நிறுவனமான “ஸாப் / Saab” நிறுவனமும் பொருளாதார நெருக்கடிகளால் நிரந்தரமாக மூடும் நிலைக்கு வந்திருந்தன.
எனினும், “வொல்வோ” நிறுவனத்தின் மகிழூந்து (Car) தயாரிப்பு பிரிவு மட்டும் சீனாவிற்கு விற்கப்பட, “ஸாப்” நிறுவனத்தின் மகிழூந்து பிரிவு நிரந்தரமாக மூடப்பட்டது.
சீனாவின் பொறுப்பில் “வொல்வோ” வந்தாலும், அதன் பெரும் பகுதி உற்பத்திகள் சுவீடனிலேயே நடந்தன. மேற்படி நிறுவனத்தின் “XC / Cross Country” இரக வாகனங்கள் உலகப்புகழ் பெற ஆரம்பித்ததும் “வொல்வோ” வின் சரிந்திருந்த பொருளாதாரம் மீண்டும் உயர ஆரம்பித்திருந்தது.
இந்த நிலையில் தற்போதைய “கொரோனா” ஏற்படுத்தியிருக்கும் அசாதாரண சூழ்நிலை இந்திறுவனத்தை மீண்டும் பாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.