தெற்கில் உள்ளவர்கள் நினைவேந்தலை பயங்கரவாதம் என்கின்றனர். இது நெறிமுறையை மீறும் விதமாகும். அரசாங்கத்துக்கு ஏற்றாட் போல் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த முடியாது.
தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளப்பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற கிளின் சிறிலங்கா செயற்திட்டம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
கிளின் சிறிலங்கா திட்டம் தொடர்பான இணையத்தளத்திற்கு சென்று அந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் அறிந்துகொள்ள முயற்சித்தேன்.
அது சமூகம்,பொருளாதாரம் மற்றும் தார்மீக பொறுப்பு என்ற மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றை தனித்தனியாக பார்வையிட்டேன்.
ஒருங்கிணைப்பின் மூலம் நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே இன்னும் விரிவான விளக்கங்கள் அவசியமாகும். இந்த அரசாங்கத்திற்கு மக்கள் பெரிய ஆணையை வழங்கியுள்ளார்கள்.
ஊழலுக்கு எதிராகவே மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள்.கடந்த 75 வருடங்களாக நாடு பாரிய ஊழல் மோசடிகளுக்கு முகம்கொடுத்துள்ளது.ஊழல் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பிலும் கூற வேண்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி உள்ளது.
இந்தக் கட்சி நாட்டில் பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்த கட்சியே இவர்கள் இப்போது அவற்றை புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.
நெறிமுறை என்ற சொல்லை பயன்படுத்துகின்றீர்கள். ஆனால் நீங்கள் செய்வதை பொறுத்தே அர்த்தம் கொள்ள முடியும்.
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினையில் பயங்கரவாத தடைச் சட்டம் மிக முக்கியமானது. நான் சில கொள்கைகளுக்கு இணங்காவிட்டாலும் ஜே.வி.பியினர் இதனை எதிர்த்தனர்.
அவர்களும் அதனால் பாதிக்கப்பட்டிருந்தனர். தேர்தலின் போதும், அதற்கு முன்னரும் இந்தச் சட்டம் நீக்கப்படும் என்று குறிப்பிட்டனர்.
இப்போது காலம் தேவையென்று கூறுகின்றனர். அதற்கு காலம் தேவைதான் ஆனால் 2015ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கம் இந்த சட்டத்தை திருத்துவதற்கும் மீளப்பெற்றுக்கொள்ளவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வாக்குறுதியளித்தது.
அப்போது அநுரகுமார திஸாநாயக்க அதனை எதிர்க்கவில்லை. இப்போது தேர்தலின் பின்னர் அரசாங்கம் ஒரு வாரகாலத்திலேயே பின்வாங்கிக்கொண்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் தவறுகள் இடம்பெற்றுள்ளது. இதனை மீளப்பெறுவதாக கூறினாலும் பொலிஸார் இதனை எப்போதும் தவறாகவே பயன்படுத்துகின்றனர்.
அரசாங்கம் செய்யாவிட்டாலும் பொலிஸார் தவறான வகையிலேயே இந்த சட்டத்தை பயன்படுத்துகின்றனர். இந்த நிலைமையை மாற்ற வேண்டும்.
இதனையே நாம் தொடர்ச்சியாக குறிப்பிடுகிறோம். இந்த சட்டம் பாடசாலை ஆசிரியர்கள் மீதும் பயன்படுத்தப்படுகின்றது.பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அங்கு நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. அது தொடர்பில் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் மிகக் கவனமாக ஆராயப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருந்தார்.
தெற்கில் உள்ளவர்கள் நினைவேந்தல் என்பது பயங்கரவாதம் என்று கூறுகின்றனர். இவர்கள் கூறுகின்றார்கள் என்பதற்காக வடக்கு, கிழக்கில் அதனை அவ்வாறு பார்க்க முடியாது.
இது நெறிமுறையை மீறும் விதமாகும். நீங்கள் அந்த சட்டத்தை உங்களுக்கு ஏற்றவாறு தவறாக பயன்படுத்தமுடியாது.
அரசாங்கம் மாற்றத்தை செய்ய வேண்டுமென்றால் ஒரு வருடத்தில் அதனை செய்ய வேண்டும். அதனை பின்னர் செய்ய முடியாது. காலதாமதம் செய்தால் பின்னர் நெருக்கடிகளை ஏற்படுத்தும்.
தெற்கில் உள்ளவர்கள் முறைப்பாடு செய்வதற்காக வடக்கு, கிழக்கில் நினைவேந்தல்களை வித்தியாசமாக பார்க்க முடியாது. அவ்வாறு செயற்பட்டால் கடந்த அரசாங்கத்தை போன்று நெருக்கடிக்குள்ளாக வேண்டும்.
இதேவேளை யாழ். மத்திய கல்லூரிக்கு புதிய அதிபரொருவர் நியமிக்கப்பட்டார். அவர் ஒரு பெண். அதிபர் சேவைக்குரிய அனைத்து தகுதிகளையும் கொண்டவராக இருக்கின்றார்.
இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் தலையீட்டால் அவரின் பதவி தடை செய்யப்பட்டது. தற்போது பதில் அதிபராக இருப்பவர் முற்றிலும் தகுதியற்றவர்.
அப்போது எதிர்க்கட்சியில் இருந்த தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய அரசியல் தலையீடுகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
இப்போது அவர் கல்வி அமைச்சராக இருக்கின்றார். இது தொடர்பில் அவர் தலையிட வேண்டும். அரசாங்கம் இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
அத்துடன் அரசியல் கைதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.