அமெரிக்காவெங்கும் பரவியுள்ள போராட்டங்களில் இதுவரை 5000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், அமெரிக்கா முழுவதும் நிலைமைகள் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு தீவிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கறுப்பின மக்கள்மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன / நிற பேதங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்களுக்கு அதிகளவில் வெள்ளையினத்தவர்களும், அரசியலாளர்களும், காவல்துறையினரும் தமது தார்மீக ஆதரவை வழங்கிவரும் நிலையில், மேற்படி நிலைமைகள் தொடர்பில் அதிபர் ட்ரம்ப் தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்ச்சியான கண்டனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
போராட்டங்களை அடக்குவதற்கு மாநிலங்களின் ஆளுனர்கள் படைபலத்தை பிரயோகிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், அதை செய்ய ஆளுனர்கள் தவறும் பட்சத்தில் இராணுவம் களமிறக்கப்படுமென தெரிவித்த கருத்தும், போராட்டங்களில் ஈடுபடும் அனைவரும் காடையர்கள் என்பது போலவும், அவர்கள்மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தருக்கும் கருத்துக்கள் சர்வதேச நாடுகளாலும், உள்ளூர் அரசியல்வாதிகளாலும் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியருக்கின்றன.
தவிரவும், கடும் படைபலத்தை உபயோகிக்க மறுக்கும் ஆளுனர்களை தரக்குறைவாக அதிபர் ட்ரம்ப் வர்ணித்து பேசிய பேச்சுக்களின் ஒலிப்பதிவுகளும் வெளியிடப்பட்டதில் அதிபர் ட்ரம்ப் மீதான கண்டனங்களும், விமர்சனங்களும் மேலும் கடுமையாகி வருகின்றன.
நிலைமைகள் மேலும்மேலும் தீவிரமடைவதற்கு அதிபர் ட்ரம்பின் விவேகமற்ற கருத்துக்களே காரணமென சாடியிருக்கும் “Huston” நகரத்தின் காவல்துறை ஆணையாளர், விவேகமாக பேச முடியாவிட்டால் அதிபர் ட்ரம்ப் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டுமென பகிரங்க கண்டனத்தை விடுத்துள்ளார். அதிபரின் தான்தோன்றித்தனமான கருத்துக்களால் போராட்டத்தின் தீவிரம் கடுமையாவதாகவும், தமது பணிகள் மேலும் சிரமத்துக்குள்ளாவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளதோடு, நாட்டை விவேகமில்லாத ஒருவர் ஆளுவதையிட்டு தான் வெட்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமைதியான உரிமைக்போராட்டங்களுக்கு தனது ஆதரவை முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் போராட்டங்களை அடக்குவதற்கு மக்கள்மீது கண்ணீர்ப்புகை குண்டுகள் பாவிக்கப்படுவதாகவும், நியூயோர்க் நகர ஆளுனர், காவல்துறையின் கண்ணீர்ப்புகை குண்டு பாவனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க கிறிஸ்தவ திருச்சபையும் காவல்துறையின் நடவடிக்கைகளையும், அதிபரின் கையாலாகத்தனத்தையும் கண்டித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.