கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பின்லாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்ற சன்னா மரின் ஜனநாயக கட்சியை சார்ந்தவர், இவர் கடந்த 2015-ம் ஆண்டு முதலே அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பல்வேறு பதவிகளில் அங்கம் வகித்து பிரதமராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெறும் 34 வயதில் பிரதமரான சன்னா மரின், உலகின் இளம் பெண் பிரதமர் என்ற பட்டத்திற்க்கு தற்போது சொந்தக்காரராக உள்ளார்.
சன்னா மரினைப் போல் அவர் பிரதிபலிக்கும் எண்ணங்களும் இளமையாகவே உள்ளது. அதாவது பின்லாந்து நாட்டில் குடிமக்களுக்கு வாரத்தில் 4 நாட்கள், தினமும் 6 மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக இருக்க வேண்டும் என்ற திட்டத்தை சன்னா மரீன் முன்மொழிந்து உள்ளார்.
இவ்வாறு செய்வதன் மூலம் மக்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் அதிக அளவில் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சிகரமாக வாழ முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து சன்னா மரின் கூறுகையில்,
‘மக்கள் அதிக நேரத்தை தங்களது குடும்பத்தினருடனும், விருப்பமானவர்களுடனும், பொழுதுபோக்கிற்கும், கலாசாரம் போன்ற மற்ற பிற அம்சங்களுடனும் செலவிட தகுதியானவர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த திட்டம் தொழிலாளர் வாழ்க்கையில் எங்களுக்கு அடுத்த படிக்கல்லாக அமையும்’ என்றார்.
பொதுவாக பின்லாந்தில் தொழிலாளர்கள் தங்களது வேலை நேரத்தை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க அந்நாட்டு தொழிலாளர் உரிமை சட்டம் வழி வகுக்கிறது. இந்த நிலையில் பிரதமரின் இந்த திட்டம் அந்நாட்டு மக்களை குதூகலத்தில் ஆழ்த்தி உள்ளது.
பின்லாந்து பிரதமரின் இந்த திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இது குறித்த தகவல் டுவிட்டரிலும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 9 மணி நேரமாக உயர்த்த மத்திய தொழிலாளர் அமைச்சகம் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.