ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க இதனை அறிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களை மேற்கொண்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர் என, தம்மை வெளிப்படுத்தி, ஊடகங்களுக்கு முன்னர் பேட்டி கொடுத்திருந்தவர் அருண் சித்தார்த். இவர் பின்னர் மைத்திரிபால சிறிசேனவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டதுடன், அந்தக் கட்சியின் சார்பில் பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டார்.
நல்லூர் கந்தன் ஆலயத்தை இடித்து விட்டு, கழிப்பறை கட்ட வேண்டும் என்று போராட்டம் நடத்திய இவர் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தியிருந்தார்.
பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான இவர் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.