நோர்வேயில் கோடைகால விடுமுறைகள் நெருங்கிவரும் நிலையில், “கொரோனா” தாக்கத்திற்குள்ளான நாடுகளுக்கான பயணங்களை தவிர்க்கும்படி நோர்வே காப்புறுதி நிறுவனமான “Tryg Forsikring” நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போதைய நிலைமைகளில், பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளுக்கு செல்வது உசிதமானதல்ல என தெரிவித்திருக்கும் மேற்படி நிறுவனம், எச்சரிக்கையையும் மீறி அந்த நாடுகளுக்கு செல்பவர்களுக்கு “கொரோனா” தொற்று ஏற்படும் பட்சத்தில், அவர்களுக்கான மருத்துவ சேவைக்கான செலவினத்தை காப்புறுதி நிறுவனங்கள் ஈடு செய்வதில் சிக்கல்கள் வருமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆபத்தான நாடுகளாக, நோர்வேயின் வெளியுறவுத்துறை அடையாளப்படுத்தும் நாடுகளுக்கு செல்வதற்காக பயணங்களை ஏற்க்கெனவே ஒழுங்கு செய்தவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படுவதில் தடையேதுமில்லை என தெரிவித்திருக்கும் மேற்படி நிறுவனம், புதிதாக பயணங்களை முன்னெடுப்பவர்களுக்கான காப்புறுதிகள் விடயத்தில் நிச்சயமற்ற தன்மை இருக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனினும், முன்கூட்டியே பயணங்களை ஒழுங்குபடுத்தியிருப்பவர்களுக்கான மருத்துவ, மற்றும் தங்குமிட காப்புறுதிகளை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளதெனினும், ஆபத்தான நாடுகளாக நோர்வேயின் வெளியுறவுத்துறை அடையாளப்படுத்தும் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு காப்புறுதிகள் செல்லாது எனவும் தெரிவித்துள்ளது.
நோர்வேயிலிருந்து வேறு நாடுகளுக்கு பயணப்படுபவர்கள், அந்தந்த நாடுகளின் எல்லையில் வைத்து திருப்பி அனுப்பப்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக எச்சரித்திருக்கும் நோர்வேயின் வெளியுறவுத்துறை, வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக மக்கள் சிந்தித்து செயலாற்றும்படி அறிவுறுத்தியுள்ளது.