விடைபெறும் 2019: மறைந்த நட்சத்திரங்கள்

You are currently viewing விடைபெறும் 2019: மறைந்த நட்சத்திரங்கள்

2019-ம் ஆண்டு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பல்வேறு படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தின. ஆனால், திரையுலக நட்சத்திரங்கள் பலரும் நம்மிடமிருந்து மறைந்தார்கள். அவர்களின் பட்டியல் இது.

ஏப்ரல் 2: இயக்குநர் மகேந்திரன்

சினிமாவில் நாவல் படைத்த மாபெரும் படைப்பாளி. ‘உதிரிப்பூக்கள்’ எனும் உதிராத பூக்களைத் தந்தவர். ரஜினியை ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’, ‘கை கொடுக்கும் கை’ என ரஜினிக்கே காட்டியவர். ‘நண்டு’, ‘மெட்டி’, ‘பூட்டாத பூட்டுகள்’ என இவர் தந்ததெல்லாம் காவியங்கள்; சினிமாவுக்கு வருவோருக்கான வேதங்கள்.

ஏப்ரல் 13: ஜே.கே.ரித்தீஷ்

குறுகிய காலத்தில் புகழ் பெற்றவர். விரல்விட்டு எண்ணக் கூடிய படங்கள்தான் நடித்தது என்றாலும் சங்கத் தேர்தலில் கவனிக்கும்படி செயலாற்றியவர். அந்தப் பக்கம் அரசியலையும் விட்டுவைக்கவில்லை. அவ்வளவு சீக்கிரமாகவே மரணத்தைத் தழுவுவார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.

ஜூன் 10: கிரேசி மோகன்

இவர் போட்டுக்கொள்ளும் வெற்றிலையிலும் கூட காமெடி நறுமணம் கமழும். நாடகம், சினிமா என இரண்டிலும் தனிமுத்திரை காட்டியது இவரின் சிரிப்புப் பேனா. வாக்கியத்தில் காமெடி வைப்பார்கள். இவரோ ஒரு வார்த்தைக்குள் ஏழெட்டு காமெடி வெடிகளைக் கொளுத்திப் போடுகிற மாயக்காரர். கமல் – கிரேஸி கூட்டணி, இன்றைக்கும் தமிழ் ரசிகர்களுக்கு வலி நிவாரணி. 40 வருட நாடக வாழ்வைக் கொண்டாடும் வேளையில், இவரின் மரணம், இன்னும் நூறு ஆண்டுகளுக்கு பேரிழப்பு.

ஜூன் 27 – இயக்குநர் விஜய நிர்மலா

ஆந்திராவின் சகலகலாவல்லி. நடிகர் கிருஷ்ணாவின் மனைவி. நடிப்பார். ஆடுவார். சண்டைக் காட்சியில் சாகசம் செய்வார். படங்களை டைரக்ட் செய்வார். கின்னஸ் சாதனை புரிந்த வெற்றி நிர்மலா… விஜய நிர்மலாவின் மரணம் அக்கட பூமியில் மட்டுமின்றி இங்கேயும் கூட பேரதிர்வை ஏற்படுத்தியது.

செப்டம்பர் 4 – ஆலயம் ஸ்ரீராம்

இயக்குநர் மணிரத்னத்தின் நண்பர். இவருடன் சேர்ந்து மணிரத்னம் தொடங்கிய ஆலயம் நிறுவனம் தந்த படங்கள் எல்லாமே தரம் மிக்கவை. பல வெற்றிப் படங்களை, தரமிக்க படங்களைக் கொடுத்த இவரின் முகம் கூட, கோடம்பாக்கக்காரர்களுக்குப் பரிச்சயமில்லை. அவரின் மரணத்தில்தான் அறிந்தார்கள், ஸ்ரீராமின் முகத்தை!

செப்டம்பர் 8 – ராஜசேகரன்

நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து ஒளிப்பதிவாளராகத் தொடங்கிய பயணம். நாலு நண்பர்களை அப்போதே சொன்ன ‘பாலைவனச் சோலை’யின் ட்ரெண்ட் செட்டர். பாரதிராஜாவின் பார்வையில் பட்டு, ‘நிழல்கள்’ படத்தில் ஹீரோ. பல படங்களை இயக்கிவிட்டு, பின்னர், இவர் நடித்த சீரியல்கள் எல்லாமே ஹிட்டு. தடால் மரணம், சின்னத்திரையிலும் பெரிய திரையிலும் ஒருசேர ஏற்படுத்தியது… பெருந்துக்கம்!

அக்டோபர் 7 – கிருஷ்ணமூர்த்தி

‘தவசி’ படத்தில் வடிவேலுடன் இணைந்து கிருஷ்ணமூர்த்தி செய்த காமெடி இப்போதும் தொலைக்காட்சிகளில் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. ‘நான் கடவுள்’ படத்தில் கிருஷ்ணமூர்த்தியின் நடிப்பு குறிப்பிடத்தகுந்த ஒன்று. ‘மருதமலை’, ‘வேல்’ உள்ளிட்ட பல படங்களில் இவரது காமெடிக் காட்சிகள் பேசப்பட்டன. புதிய படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக குமுளியில் இருந்தார் கிருஷ்ணமூர்த்தி. அக்டோபர் 7-ம் தேதி அதிகாலை 4.30 மணியில் திடீர் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.

அக்டோபர் 28 – காமெடி நடிகர் மனோ

தீபாவளியன்று மனைவி லிவியாவுடன் அம்பத்தூர் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நடுவிலிருந்த மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே மனோ மரணமடைந்தார்.

நவம்பர் 22 – பாலாசிங்

குமரி முனைக்காரர். நடிப்பில் பதினாறடி பாய்வார். நாசர் அறிமுகப்படுத்தினார். பின்னர், இவரின் நடிப்புக்கு ஒவ்வொரு படங்களுமே சாட்சியாயின. இயல்பான நடிப்பால் எல்லோரையும் ஈர்த்தவர்… அந்தக் காலனையும் ஈர்த்துவிட்டார் போலும்!

டிசம்பர் 12 – கொல்லப்புடி மாருதி ராவ்

மாபெரும் கலைஞர். மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர். கே.விஸ்வநாத்தின் படங்களில் இவருக்கென ஒரு கேரக்டர் காத்திருக்கும். கமலின் ‘சிப்பிக்குள் முத்து’, ‘இந்திரன் சந்திரன்’, ‘ஹேராம்’ என பல படங்கள். தெலுங்கில் இவர் நடித்த படமெல்லாம் இவரின் கேரக்டருக்காகவும் நடிப்புக்காகவுமே பேசப்பட்டன. அந்த மகா கலைஞனை இழந்து நிற்கும் ஆந்திரத் திரையுலகைத் தேற்ற வார்த்தைகள்தான்

பகிர்ந்துகொள்ள