ஆடிப்பாடி இருந்த நிலம்!
கூடிக் குலாவி வாழ்ந்த இனம்!
ஓடி ஓடி உழைத்த சனம்!
நாடு நாடாவிட்டால் ஏது நாடென
கூடு குலையாதிருக்க
உயிர்க்கூடு துறந்த அறம்!
காடு கடல் தரை வானமென
மறமேந்தி எல்லைகளெல்லாம்
காவல் சாமிகள் விழி நிமிர்த்திய வீரம்!
சோரம் போகாத தீரர்களின் கொள்கை வழி கொள்ளை போகாத
இலக்கு!
வெள்ளையனுக்கு முதுகு காட்டா
பண்டாரவன்னியன் படையணியின்
எண்ணங்களில் இறக்கை கட்டி
மண்ணிலே பாசம் தீட்டிக் காத்தனர்
பிரபாகரத்தில் பிணைந்த பிள்ளைகள்!
உலகமே வியந்த உன்னத போரிலே
உயிர்க்கொடைகள் அதிகம்!
இதிகாசங்களை படித்த எமக்கு
உயிர் ஊதிய காவியங்களை
கண்முன்னே காட்டியது வீரவரலாறு!
தன் இனத்திற்காக தன்னையே
கொடையாய் தந்த கொற்றவர்
எழுதிய தமிழீழ விடுதலை வரலாறு!
நாம் நித்திரையாய் போகல் ஆகாது!
வித்துடலாய் விதைக்கப்பட்ட வரின்
சத்தியங்கள் சாகக்கூடாது!
-தூயவன்-