தென்னாபிரிக்காவில் இருந்து விமான சக்கரத்தில் ஒளிந்திருந்து நீண்ட 11 மணி நேர பயணத்திற்கு பின்னர் ஒருவர் நெதர்லாந்துக்கு சென்று சேர்ந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த நபர் உயிர் தப்பியதே அதிசயமாக பார்க்கப்படும் நிலையில், அவரது உடல் நலனே தற்போதைய சூழலில் முக்கியம் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
நெதர்லாந்தின் ராணுவ பொலிசார் குறித்த தாவலை வெளியிட்டுள்ளனர். 23ம் திகதி இவ்வாறான சம்பவம் நடந்துள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மிகப்பெரிய சரக்கு விமானம் ஒன்றின் சக்கரம் அமைந்துள்ள பகுதியிலேயே அந்த நபர் ஒளிந்திருந்துள்ளார். மிகவும் ஆபத்தான இந்த பயணத்தை மேற்கொண்ட அந்த நபர் உயிருடன் இருப்பதை உறுதி செய்த ராணுவ பொலிசார், உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
அவரது வயது எந்த நாட்டவர் உள்ளிட்ட தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில் அவரது உடல் நிலை குறித்த கவலையே தங்களுக்கு இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இத்தாலிய நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானத்திலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானமானது கென்யாவின் நைரோபியில் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் மேலதிக தகவல்களை வெளியிட விமான சேவை நிறுவனம் மறுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதியும் அளித்துள்ளது.