வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜன் மற்றும் உட்கின் ஆகிய இருவரும் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரஷ்யாவின் Tver பிராந்தியத்தில் உள்ள போலோகோவ்ஸ்கி மாவட்டத்தில் RA-02795 என்ற விமான எண்ணை உடைய எம்ப்ரேயர் 600 வணிக ஜெட் ஒன்று தரையில் விழுந்து இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
ரோசாவியட்சியா-வின் தகவல்படி, விபத்துக்குள்ளான வணிக ஜெட் விமானத்தில் ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜன் மற்றும் அவரது துணை தலைவர் டிமிட்ரி உட்கின் ஆகிய இருவரும் பயணித்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த விபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜன் மற்றும் உட்கின் ஆகிய இருவரும் உயிரிழந்து விட்டதாக சில ஊடக அறிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றனர். இதனை ஜாபோரிஜியா பிராந்தியத்தின் கோலிட்டர், ரோகோவ்வும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சி சேனலான ரஷ்யா 24, எவ்ஜெனி பிரிகோஜன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
இதுவே எவ்ஜெனி பிரிகோஜன் உயிரிழப்பு குறித்து வெளியாகியுள்ள முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையாகும். விமான விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் Embraer ERJ-135BJ Legacy 600 வணிக ஜெட் விமானத்தின் பாகங்கள் கிடப்பதை பார்க்க முடிகிறது. இதற்கிடையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குர்ஸ்கை விட்டு அவசர அவசரமாக வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் விபத்து குறித்து கிரிமினல் வழக்கு திறக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. விமானத்தில் மொத்தமாக 10 பேர் வரை பயணித்ததாக கூறப்படும் நிலையில், அதில் 7 பேர் பயணிகள் என்றும் 3 பேர் விமான குழுவை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாக்னர் கூலிப்படை சமீபத்தில் ரஷ்யாவிற்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கியதை தொடர்ந்து அவை முற்றிலுமாக கலைக்கப்பட்டது, அத்துடன் அதன் வீரர்கள் பெலாரஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் வாக்னர் கூலிப்படை தலைவர் விமான விபத்தில் உயிரிழந்து இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி ரஷ்யாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தகவலை தனிப்பட்ட முறையில் தங்கள் செய்தி நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.