விராஜ் மெண்டிஸ் அவரின் மறைவு குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்!

You are currently viewing விராஜ் மெண்டிஸ் அவரின் மறைவு குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்!

மனித உரிமை செயற்பாட்டாளர் திரு விராஜ் மெண்டிஸ் அவரின் மறைவு குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் இறு வணக்க குறிப்பு :-

மிகவும் நம்பிக்கைக்கு உரிய ஒரு உயரிய நண்பரும் சமரசமற்ற ஒரு கொள்கைவாதியுமான திரு விராஜ் மெண்டிஸ் அவர்களின் இழப்பானது எம்மை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழர் தரப்பு தமக்கான உண்மையானதும் உறுதியானதுமான ஆதரவுத்தோழமை ஒருவரை இன்று இழந்து நிற்கின்றது.

என்னைப் பொறுத்தவரையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னர் என்னை மிகத் துயரத்தில் ஆழ்த்திய ஒரு இழப்பு திரு விராஜ் மெண்டிஸ் அவர்களுடைய மரணம் ஆகும்.

ஈழத்தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமை குறித்தும் ஸ்ரீலங்கா அரசு தமிழ் தேசத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விட்டுள்ள இனப்படுகொலையை எதிர்த்து ஒரு தற்காப்பு போராட்டத்தை செய்ய வேண்டிய தமிழர் தேசத்தின் சட்டபூர்வ உரிமை /கடப்பாடு குறித்தும் திரு.விராஜ் மெண்டிஸ் அவர்கள், தன் இறுதி மூச்சுவரை எதுவித சமரசம் அற்று உறுதியாக இருந்தார்.

அர்ப்பணிப்பான அவரது இந்தக் கொள்கை பிடிப்பே, அவர் சார்ந்த அமைப்பு மூலம் டப்ளின் மற்றும் பிரேமன் போன்ற இடங்களில் நடந்த மக்கள் தீர்ப்பாயத்தின் மூலம் தமிழர் மீது இழைக்கப்பட்டது இனப்படுகொலையே என நிரூபிக்க வழி வகுத்தது.

காலையில் எழுந்தது முதல் நித்திரைக்கு செல்லும் வரைக்கும் அந்த உயரிய மனிதன் சிந்திப்பது, செயல்படுவது எல்லாம் தமிழர்களினதும் மற்றும் உலகில் ஒடுக்கப்படும் ஏனைய தேசங்களினதும் நல்வாழ்வு குறித்தும், தன்னைப் போல் சிந்தனையோட்டம் உடைய ஏனைய செயற்பாட்டாளர்களை இணைத்துக்கொண்டு ,
இந்த ஒடுக்கு முறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராக எவ்வாறு அணிதிரண்டு எதிர்கொள்ளலாம் என்பது பற்றியுமே ஆகும்.

நேரடியாக திரு விராஜ் மெண்டிஸ் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைப்பதற்கு முன்னதாகவே திரு விராஜ் மெண்டிஸ் உட்பட மேலும் சில சிங்கள தேசத்தை சேர்ந்த மனித நேயம் மிக்க நாயகர்கள் பற்றி, எனது தந்தையார் இன செயற்பாட்டு பணிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று வந்தபின் கூற கேள்விப்பட்டிருந்தேன்.

மானுடத்தை நேசிக்கும் அந்த உயரிய மனிதர்கள் குறித்து எனது தந்தையார் கூறுகின்ற ஒரு வாக்கியம் என் நினைவுக்கு வருகிறது. “தமிழர்களுக்கு நீதி வேண்டும் செயற்பாடுகளில் ஒருவேளை தான் சோர்ந்து போனால் கூட சிங்கள இனத்தை சேர்ந்த அந்த உயரிய மனிதர்கள் மனிதர்கள் ஒருபோதும் தமது பணிகளில் இருந்து விலகிக் கொள்ளவோ விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள் ” என்று எனது தந்தையார் அவர்கள் குறித்து எனக்கு கூறி இருந்தார் .எனது தந்தையார் சொன்னது போலவே திரு விராஜ் மெண்டிஸ் அவர்கள் தனது கடைசி மூச்சு வரைக்கும் தமிழ் இனத்திற்கான அர்ப்பணிப்புக்கும் செயற்பாட்டுக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறார்.

அவரது வாழ்வும் பயணமும் எமக்கெல்லாம் ஒரு உதாரணமாக இருந்து எம்மை மேலும் நம்பிக்கையுடனும் உத்வேகத்துடன் பயணிக்க வழிகாட்டும்.

நாம் இன்று திரு விராஜ் மெண்டிஸ் அவர்களை இழந்து இருந்தாலும் அவர் தன் செயற்பாடுகள் மூலம் நமக்குத் தந்த அந்த ஆத்ம பலத்தை நாம் இழக்கப் போவதில்லை .
அது எப்போதும், அவரது தோழர்களின் வாழ்விலும் செயலிலும் அவரைத் தெரிந்தவர்களின் நினைவுகளிலும் விடுதலை தாகத்தோடு நீதிக்கும் சுதந்திரத்திற்காகவும் போராடும் அனைத்து மக்களின் இதயங்களிலும் நிறைந்திருந்து வழிப்படுத்தும்.

எல்லாவற்றிற்கும் நன்றி விராஜ்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply