“துடுப்பாட்டத்தின் பைபிள்” என்று வர்ணிக்கப்படும் “விஸ்டன் புத்தகம்” ஆண்டுதோறும் உலகின் முன்னணி துடுப்பாட்ட வீரரை தேர்வு செய்து கவுரவித்து வருகின்றது. இந்த ஆண்டுக்கான உலகின் முன்னணி துடுப்பாட்ட வீரராக இங்கிலாந்து அணியின் சகல துறை வீரர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு (2019) நடந்த உலக கோப்பை துடுப்பாட்ட இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்த பென் ஸ்டோக்ஸ், அதே ஆண்டில் நடந்த ஆஷஸ் போட்டி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது தொடர் போட்டியில் 2-வது சுற்றில் ஆட்டம் இழக்காமல் 135 ஓட்டங்களை குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
சிறப்பான இந்த இரண்டு ஆட்டமும் அவருக்கு இந்த கவுரவத்தை தேடிக்கொடுத்துள்ளது. ஆன்ட்ரூ பிளின்டாப்க்கு (2005) பிறகு இந்த பட்டத்தை பெறும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) ஆவார். பென் ஸ்டோக்ஸ் மகுடத்தை சூடியதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக இந்த பட்டத்தை அலங்கரித்த இந்திய துடுப்பாட்ட அணித்தலைவர் விராட் கோலியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.