விழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் பரிமாற தடை!

You are currently viewing விழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் பரிமாற தடை!

தமிழ்நாடு அரசு கடந்த 18-ம் தேதி அரசிதழில், வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் சிறப்பு உரிமத்துடன் மது பரிமாற அனுமதிப்பதாக அறிவித்திருந்தது. பின்னர் இந்த அறிவிப்பில் திருத்தம் மேற்கொண்ட தமிழ்நாடு அரசு, வணிக வளாகங்கள், உள்நாட்டு மையங்கள், கூட்ட அரங்குகள், சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்கள், அரங்குகளில் மட்டும் மதுபானம் பரிமாற அனுமதி அளித்து நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டது.

இதற்கு அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்ப்பு எழவே, வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் சிறப்பு உரிமத்துடன் மது பரிமாற வழங்கப்பட்ட அனுமதியையும் நீக்கம்செய்து அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு மைதானங்களில் மது பரிமாற சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்திருக்கிறது.

முன்னதாக தமிழ்நாடு அரசின் இத்தகைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசாணையை ரத்து செய்யவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் வைத்தியநாதன், கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், விளையாட்டு மைதானங்களுக்கு குழந்தைகள், குடும்பங்கள் செல்ல வாய்ப்பிருக்கிறது என்றும், சர்வதேச கருத்தரங்குகள் என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தி மது விநியோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது என்றும் கூறி… இதற்குத் தடைவிதிக்க வேண்டும் என வாதத்தை முன்வைத்தார். அதன் பின்னர் வாதத்தின் அடிப்படையில், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு மைதானங்கள், அரங்குகள் போன்றவற்றில் மது பரிமாற தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply