வீட்டுக்குள் அடிக்கும் பதவிப்புயல்!

You are currently viewing வீட்டுக்குள் அடிக்கும் பதவிப்புயல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை நிரப்புவதற்கு பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்துள்ள விவகாரம் தமிழ் அரசுக் கட்சிக்குள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்திருந்த ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கலையரசனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் நேற்றுக்காலை அறிவித்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தமிழரசுக் கட்சியின் ஏனைய தலைவர்கள் பேச்சுக்களை நடத்தி வந்த நிலையில், திடீரென இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உள்ளிட்டவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நேற்று அவசரமாக கூடிய தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பொதுவான முடிவு ஒன்றினை எடுக்காமல் தன்னிச்சையாக யாராவது தேசியப் பட்டியலுக்கு நியமிக்கப்பட்டால் அந்த முடிவு மீள் பரிசிலனை செய்யப்பட வேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேசியப் பட்டியல் ஆசனம் குறித்து பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல், முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிறிதரனின் அழுத்தங்களின் பேரிலேயே கலையரசனை நியமிக்கும் முடிவு அறிவிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழரசுக் கட்சிக்குள் இருந்தும், புளொட் மற்றும ரெலோ தரப்பில் இருந்தும் எழுந்துள்ள எதிர்ப்புகளை அடுத்து, கலையரசனை தேசியப் பட்டியல் உறுப்பினராக அறிவிக்கும் முடிவை இடைநிறுத்தி வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் செயலாளருக்கு பணித்துள்ளார் என்றும் செய்திகள் கூறுகின்றன.

தேசியப் பட்டியல் ஆசனம் மாவை சேனாதிராசாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பங்காளிக் கட்சிகள் விரும்பும் நிலையில், அதற்கு எதராக சுமந்திரன் தரப்பு நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனால் கூட்டமைப்புக்கள் பாரிய நெருக்கடி தோன்றியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்துகொள்ள