வெடுக்குநாறிமலையில் உள்ள ஆதி சிவன் மற்றும் ஆலய விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் இன்று நெடுங்கேணி சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலய விக்கிரகங்கள் அகற்றப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காக ஆலய நிர்வாகத்தினர் ஆலய வளாகத்திற்கு செல்லவுள்ளனர்.
இதேவேளை சிறீலங்கா காவற்துறையும் இராணுவமும் இப்படியான நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருக்கும்போது எப்படி தீர்வு எட்டும் என்ற மக்களின் விசனத்தையும் மறுக்க முடியாத அளவிற்கு கடந்த செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம், வடமனான பர்வத விகாரை என பௌத்த ஆலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் அங்கிருந்த மக்கள் வெளியேறியதால் அவ் ஆலயத்திற்குச் சென்று வழிபட முடியாத நிலையும் ஏற்பட்டிருந்தது.
பின்னர் மீண்டும் அவ்விடத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதன் பிற்பாடு மக்கள் இம் மலைக்குச் சென்று சிவமூர்த்திகளை வழிபட தொடங்கியிருந்தனர்.
இந்நிலையில் அங்கு வழிபாடுகளை மக்கள் மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் பல காரணங்களை கூறி தடைவிதித்திருந்த போதும் அத்தடைகளை தாண்டி மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில் 2018 ல் இலங்கை தொல்லியல் திணைக்களத்தினர் மற்றும் வனவளத் திணைக்களத்தினர் மீண்டும் மக்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட தடைவிதித்திருந்தனர்.
இருந்தும் மக்களின் தொடர் எதிர்ப்பினால் தொல்பொருட் திணைக்களத்தினர் தற்காலிகமாக தடையினை நீக்கி வழிபாடுகளை மட்டும் மேற்காள்ள அனுமதித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை குறித்த ஆலயத்திற்கு மக்கள் சென்ற போது சிவலிங்கம் மற்றும் ஏனைய விக்கிரகங்கள் தூக்கியெறியப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் இருந்தது.
இந்நிலையில் குறித்த இடத்தின் பெயரும் வட்டமான பர்வத விகாரை என பௌத்த விகாரையின் பெயரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.