வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களின் உடல்நிலை மோசமடைவதற்கு முன்னர் அவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் வவுனியா சிறைச்சாலையில் இன்று(13) பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வைத்து பொலிஸாரினால் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 8 பேருக்குமான விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்தது.
எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.
கடந்த காலங்களில் இதே வவுனியா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்களுக்கு கட்டுப்பட்டு அந்த தீர்ப்புக்களின் பிரகாரம் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஆலய பூசகர், ஆலய நிர்வாகத்தினர், பக்தர்கள் என 8 பேரை பொய் குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்தனர்.
19 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரக்தி அடைந்த 8 அப்பாவிகளும் சிறைச்சாலையில் பெரும் குழப்பம் அடைந்திருக்கிறார்கள்.
அதில் 5 பேர் உண்ணாவிரதம் இருக்கின்றார்கள். நேற்று(12) காலை முதல் உணவை எடுக்க மறுத்து உண்ணாவிரதம் இருக்கின்றார்கள்.
இதன்காரணமாக என்ன ஆகுமோ என்ற அச்சம் அவர்களது குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளது. 8 பேருமே எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகள்.
சிறிலங்கா அரசு அதாவது தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம், பொலிஸார் கூட்டிணைந்து சிங்கள பௌத்த மயமாக்கல் திட்டத்தின் கீழ் அந்த இடத்தில் வழிபாட்டில் ஈடுபடுகின்ற தமிழர்களை விரட்டியடித்து அந்த இடத்தில் பௌத்த மயமாக்கலுக்கு எடுத்த முயற்சி வெற்றியளிக்காத நிலையில், ஆலய பூசகரையும் பக்தர்களையும் கைது செய்திருப்பதன் மூலம் எதிர்காலத்தில் அந்தப் பகுதிக்கு யாரும் செல்ல முடியாத அச்சநிலையை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களை கைது செய்த பின்னரே தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம் என்பவற்றிடம் கடிதங்கள் பெறப்பட்டு அப்பாவிகளை குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பொய் குற்றச்சாட்டில் உள்ள 8 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இதில் ஆலய பூசகர் உள்ளிட்ட 5 பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இவர்கள் உடல் மோசமடைவதற்கு முன்னர் விடுவிக்கப்பட வேண்டும்.
இவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் உடனடியாக வடக்கு- கிழக்கில் போராட்டம் முன்னெடுக்கப்படும். இதற்கான முன்னெடுப்புக்கள் பொது அமைப்புக்கள் மற்றும் சமய அமைப்புக்கள் முன்னெடுத்துள்ளனர்.
பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்திய நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். இனவாத செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களும் அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க இராஜதந்திர அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.