மேற்கு “அண்டார்டிக்கா”வில் இருக்கும் மிகப்பெரிய பனிப்பாறை உருகி வருவதால், உலகில் கடல்மட்டத்தின் உயரம் அதிகரித்து வருவதாக இயற்கை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேற்கு அண்டார்டிக்காவில் இருக்கும், “Thwaites” எனப்படும் பெரிய பனிப்பாறையானது, பரப்பளவில் முழு பிரித்தானியாவின் பரப்பளவுக்கு சமனானது. கடந்த காலங்களில், சுமார் 4 விகிதமான கடல்மட்ட உயர்வுக்கும் இந்த பனிப்பாறை உருகிவருவதே காரணம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
செய்மதிகளின் உதவியோடு எடுக்கப்பட்ட படங்களை ஆராய்ந்த ஆய்வாளர்கள், இந்த பனிப்பாறை, எதிர்பார்க்கப்பட்டதற்கும் மேலாக விரைவாக உருகிவருவதாகவும், இப்பனிப்பாறை முழுவதுமாக உருகினால், உலகின் கடல்மட்டம் சுமார் அரை மீட்டர்கள் அளவுக்கு உயர்வை சந்திக்கும் எனவும் தெரிவிக்கிறார்கள்.
குறித்த இந்த பனிப்பாறை வேகமாக உருகி வருவதற்கான காரணங்களை அறிவதற்காகவும், இப்பனிப்பாறை முழுவதுமாக உருகுவதற்கு எவ்வளவு காலங்கள் எடுக்குமென்பதை அறிவதற்காகவும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்னவென்பதை அறிவதற்காகவும் சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அண்டார்டிக்காவில் ஆய்வு மையம் ஒன்று அமைக்கப்பட்டு, சுமார் 5 வருட காலத்திற்கான திட்டமிடலோடு தொடர்ச்சியான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கிழக்கு, மேற்கு என இரு பிரிவுகளாக பிரிந்து போய்க்கிடக்கும் பனிப்பிரதேசமான அண்டார்டிக்காவின் கிழக்குப்பகுதியானது முழு அண்டார்டிக்காவின் 90 சத விகிதமான பகுதியை கொண்டுள்ளதோடு, மிகுதி 10 சத விகிதமும் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது.
இதில், கிழக்குப்பகுதியானது பூமியின் நிலப்பரப்பின்மேல் அமைந்துள்ளதால் அப்பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் திடமாக இருப்பதாகவும், மேற்குப்பகுதியில் அமைந்துள்ள பனிப்பாறைகள் கடலின்மேல் அமைந்துள்ளதால் அப்பகுதி இலகுவில் உருகி நீராக மாறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.