வேகமெடுக்கும் ஒமைக்ரான்: தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

You are currently viewing வேகமெடுக்கும் ஒமைக்ரான்: தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் தாக்கம் காரணமாக கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து உத்தரபிரதேசம், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், ஒமைக்ரான் பரவி வருவதாலும் இதனை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ. வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 10-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளதை கருத்தில்கொண்டு பொதுமக்கள் நலன் கருதி கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

* சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

* மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.

* அனைத்து பள்ளிகளிலும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 10-ந்தேதி முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

* அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிகள் நடத்துவது ஒத்திவைக்கப்படுகிறது.

கல்லூரிகள் செயல்படும்

* 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும்.

* வழிபாட்டு தலங்களை பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

* உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

* பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

* இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

* துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள்

* கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சிநிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* பொது போக்குவரத்து பஸ்களில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படும்.

* மெட்ரோ ரெயிலில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

* தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

* திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

* உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50 சதவீதம் பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

* அழகு நிலையங்கள், சலூன்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

கட்டாயம் தடுப்பூசி செலுத்தவேண்டும்

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். அதன் விவரம் வருமாறு:-

* தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒமைக்ரான் வைரஸ் அதிகம் தாக்க வாய்ப்புள்ளதால் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனடியாக 2-ம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

* கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்யவேண்டும்.

* கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் அனைவருக்கும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

* அனைத்து நிறுவனங்களும் குளிர்சாதன வசதியை தவிர்த்து வாடிக்கையாளர்களை அனுமதிக்கும்போது சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்

* நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த்தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

* கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு, நோய்த்தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க்கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளவேண்டும்.

விதி மீறினால் அபராதம்

வரையறுக்கப்பட்ட நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில், நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்படவேண்டும். அதன் விவரம் வருமாறு:-

* நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிரமாக நோய்த்தொற்று பரவலை வீடு, வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.

* கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.

ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும் தற்போது உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோய் பரவி வருவதால், பொது இடங்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்தவேண்டும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் கொரோனா நோய்த்தடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை தொடர்ந்து கண்காணிக்கவேண்டும்.

எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிந்து சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். மேலும், மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியினை கட்டாயம் செலுத்திக்கொள்ளுமாறும், மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply