உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1600 கடந்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பானது அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது. குரங்கம்மை தொற்றானது 39 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1600 கடந்துள்ளது.
இந்த நிலையில், குரங்கம்மை தொடர்பில் அவசர கூட்டத்திற்கு உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளதுடன், எதிர்வரும் 23ம் திகதி விரிவான விவாதம் முன்னெடுக்கவும் முடிவு செய்துள்ளது.
இதனிடையே, தற்போதைய சூழலில் குரங்கம்மை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைவருக்கும் பெரியம்மை தடுப்பூசிகள் செலுத்த தேவையில்லை எனவும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
குரங்கம்மை தொற்றுக்கு பெரியம்மை தடுப்பூசிகள் பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அதன் பலன் தொடர்பில் ஆய்வு முடிவுகள் வெளிவரவில்லை என்றே கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியம் அதன் உறுப்பு நாடுகளுக்கு விநியோகிக்கும் வகையில் பெரியம்மை தடுப்பூசியின் 110,000 டோஸ்களை வாங்கியுள்ளது.
கடந்த மே மாதம் முதன்முறையாக, அதுவரை குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்படாத நாடு ஒன்றில் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த விவகாரம் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.