வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் ‘புதிய மொந்தையில் பழைய கள்ளு’

You are currently viewing வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் ‘புதிய மொந்தையில் பழைய கள்ளு’

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ‘ புதிய மொந்தையில் பழைய கள்ளு ‘ என்பதை போன்று ஒற்றையாட்சியை பேணிப் பாதுகாக்கும் வகையில் உள்ளன. இந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழ்த் தேசத்து அரச உத்தியோகத்தர்கள் தபால்மூல வாக்களிப்பை பகிஷ்கரிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற வெளிநாட்டு தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல்,பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வேலையாளர்களின் தேசிய குறைந்ததபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் ஆகியன மீது இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 18 நாட்களே உள்ளன. இது இந்த பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வு கடைசி அமர்வாகவும் இருக்கலாம். இந்நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து வேட்பாளர்கள் மிகத் தீவிரமான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இந்த நேரத்தில் எமது கட்சியின் நிலைப்பாட்டை கூற வேண்டியுள்ளது.

75 வருடங்களாக நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் எடுக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். 2022ஆம் ஆண்டு மக்கள் அப்போதைய ஜனாதிக்கும் அரசாங்கத்திற்கு எதிராகவும் போராடினர். அதனை தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தான் இனப்பிரச்சினையை தீர்ப்பதாகவும் இதன்படி ஒத்துழைப்பு வழங்குமாறும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளிடம் கூறினார். இதன்போது எமது கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் ஜனாதிபதியின் முயற்சியை வரவேற்பதாகவும் அதற்கு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் கூறினார்.

எவ்வாறாயினும் 75 வருடங்களாக தமிழ், சிங்கள மக்களிடையே பகையை ஏற்படுத்தி யுத்தத்திற்கு காரணமான ஒற்றையாட்சி அரசியலமைப்பு மற்றும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான ஒற்றையாட்சி அரசியலமைப்பை இல்லாது செய்து சமஷ்டி அரசியலமைப்பை கொண்டுவந்தால் அதனுடாக இனங்களுக்கு இடையே சமத்துவம் மற்றும் வீழ்ந்த பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும். அதனை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவ்விடத்தில் இருந்து இனப்பிரச்சினையை தீர்த்து, பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக எமது கட்சித் தலைவர் கூறியிருந்தார்.

அதற்கு பின்னரும் தமிழ், முஸ்லிம் கட்சிகளை அழைத்து பல பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி பல கூட்டங்களை நடத்தி, அனைத்து இனங்களையும் அரவணைத்துச் செல்லும் தலைவர் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி, அதனூடாக சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச சமூகத்திடம் இருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளிலேயே ஈடுபட்டிருந்தாரே தவிர, இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்கவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள, பௌத்த மயமாக்கலை தீவிரப்படுத்தும் செயற்பாடுகளிலேயே அவரின் அரசாங்கம் ஈடுபட்டது. அத்துடன் சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரிடமும் எமது கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். ஒற்றையாட்சி அரசியலமைப்பை நீக்க வேண்டும். சமஷ்டி அரசியலமைப்பை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்துள்ளோம். ஆனால் எவரும் அதனை செவிமெடுக்கவில்லை.

ஒற்றையாட்சி அரசியலமைப்பு நீக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்று உத்தரவாதம் வெளிப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் இனவழிப்புக்கு காரணமான தொடர்ந்து கட்டமைப்பு சார் இனவழிப்பை முன்னெடுக்கும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிராகரிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற முடிவை ஏற்கனவே எடுத்திருந்தோம். மக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்களையும் வெளியிட்டுள்ளோம்.

வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய மொந்தையில் பழைய கள்ளு என்பதை போன்று ஒற்றையாட்சியை பேணிப் பாதுகாக்கும் வகையிலேயே அந்த விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். தபால் மூல வாக்களிப்பு நடக்கவுள்ள நிலையில் தமிழ்த் தேசத்து அரச உத்தியோகத்தர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply