குழந்தைகளுக்கான பாணி மருந்துகள், நோயாளிகளுக்கான அத்தியாவசிய மருந்து வகைகள் எமது வைத்தியசாலையில் இல்லை. நோயாளிகளை வெளியே வாங்குமாறு கூறவும் எமக்கு மனம் வரவில்லை. ஏனென்றால் மக்கள் ஏற்கனவே கஷ்டத்தில் உள்ளார்கள். அவர்களை மேலும் கட்டத்திற்குள் தள்ளுவதற்கு மனமில்லாமல் இருக்கிறது. வைத்தியர் சேவையை சரியாக செய்ய முடியாமல் உள்ளது. இந்த தொழிலில் இருந்து விலக வேண்டும் என்ற அளவிற்கு உள்ளது என வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் ரதினி காந்தநேசன் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளும் ஏனைய நல்லுள்ளம் கொண்ட உறவுகளும் எங்களுக்கு போதுமான அளவு குழந்தைகளுக்கான மருந்துகளையும், சளி மற்றும் காயம் போன்றவற்றிற்கு பயன்படுத்தும் மருந்துகளையும் வழங்கினால் நன்றாக இருக்கும்.
அதைத்தவிர எங்களது ஆம்புலன்ஸ் நன்றாக பாவனையில் இருந்தது. காரைநகர் வைத்தியசாலையின் ஆம்புலன்ஸ் பழுதடைந்ததன் காரணமாக அந்த ஆம்புலன்ஸ் எமது வைத்தியசாலையில் விட்டுவிட்டு எங்களது வைத்தியசாலை ஆம்புலன்ஸை எடுத்துச் சென்றனர்.
காரைநகர் செல்லும் வீதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆகையால் எமது ஆம்புலன்ஸின் நான்கு டயர்களும் பழுதடைந்து ஓட முடியாத நிலையில் இருந்தது. 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் ஆம்புலன்ஸ் சேவிஸ் போடவேண்டிய தேவை உள்ளது. ஆனால் 9 ஆயிரம் கிலோமீட்டர்கள் ஓடிய பின்னரும் சேவிஸ் போடுவதற்கு நிதி வசதி இல்லாத நிலை காணப்பட்டது. அத்துடன் வேகக்கட்டுப்பாட்டு பாகங்களும் மோசமடைந்த நிலையில் உள்ளது. ஆகையால் இந்த ஆம்புலன்ஸை பாவிப்பது நோயாளி, சாரதி மற்றும் ஆம்புலன்ஸிற்கு ஆபத்தானது. எனவே ஜனவரி மாத இறுதியில் இருந்து இந்த ஆம்புலன்ஸை பாதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டது.
வடமாகாணத்துக்கான நிதி ஒதுக்கீடுகளில் பாரபட்சம் காணப்படுகிறது. வடக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் பெருமளவு நிதி வவுனியா மாவட்டத்திற்கு ஒதுக்கப்படுகிறது. கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடானது மிகவும் குறைவாக இருப்பதாகவே எனக்கு தெரிகிறது.
யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் உள்ள ஆறுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட பழுது பார்க்கும் நிலையங்களில் திருத்தப்பட்டு, அதனை மீள எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது. ஏனெனில் திருத்திய ஆம்புலன்ஸ்களை மீள எடுப்பதற்கு நிதி வசதி இல்லை.
ஆகையால் ஒரு சில ஆம்புலன்ஸ்கள் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் சேவையில் ஈடுபடுகிறது. இதனால் எரிபொருள் வீண்விரயம் செய்யப்படுவதுடன் ஆம்புலன்ஸும் விரைவில் பழுதடைகிறது.
எமக்கு கிடைக்கும் மருந்துகளின் அளவுகளும் குறைவாகக் காணப்படுகிறது. அந்த மருந்துகளை எடுத்து வருவதற்கு ஆம்புலன்ஸ் இல்லாமல் தாமதிப்பதால் எமக்கான மருந்துகள் வேறு வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படுகிறது.
எனவே புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற உறவுகளும் நல்லுள்ளம் கொண்ட உறவுகளும் முன்வந்து எமக்கான மருந்துகள் வாங்குவதற்கும் ஏனைய வைத்திய சேவைகளுக்குமான உதவிகளை வழங்க வேண்டும் – என்றார்.