வையகம் உள்ளவரை வாழ்வாய் நீ !

You are currently viewing வையகம் உள்ளவரை வாழ்வாய் நீ !

யூலை 5

வையகம் உள்ளவரை
வாழ்வாய் நீ !

பேரிருளில்
பெருநெஞ்சுள்
கருவாகினாய்…

பெருமலையை
பெயர்ப்பதற்காய்
உருவாகினாய்….

உன்முகத்தை
மறைப்பதற்காய்
கறுப்பாகினாய்…..

எம்வாழ்வு
பெருகவென
ஒளியாகினாய்….

பேரண்டம்
பிளவுபட
ஒலியாகினாய்…..

மூச்சாகி
திசை தழுவும்
காற்றாகினாய்….

கரையோடு
உறவாடும்
அலையாகினாய்….

கார்முகிலாய்
திரண்டெழுந்து
மழையாகினாய்….

மண்ணுள்ளும்
மனதுள்ளும்
முளையாகினாய்….

பூவான நீ
பின்பு
புயலாகினாய்….

புயலே நீ
குகை புகுந்து
புகையாகினாய்……

மலரே உன்
மடிதன்னில்
இடியேந்தினாய்…..

இடியாலே
கொடியோரின்
கதை போக்கினாய்…..

விழிவழியும்
துளிகளுக்கு
முடிவாகினாய்….

உனைச் சுமந்த
தோள்களுக்கு
சிறகாகினாய்….

வையகம்
உள்ளவரை
நீ வாழுவாய் !

-ஆதிலட்சுமி-

பகிர்ந்துகொள்ள

Leave a Reply