ரஷ்ய கோடீஸ்வரர் ஒருவர் தமது மனைவி மற்றும் மகளுடன் ஸ்பெயின் நாட்டில் குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள சொந்த குடியிருப்பிலேயே 55 வயதான Sergey Protosenya தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மகள் 18 வயதான மரியா மற்றும் மனைவி நடாலியா ஆகியோர் கோடாரியால் தாக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த கொலை சம்பவமானது தற்கொலை மற்றும் கொலையா அல்லது, திட்டமிட்ட படுகொலையா என்பது தொடர்பில் ஸ்பெயின் காவல்த்துறையினர் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
சுமார் 333 மில்லியன் பவுண்டுகள் சொத்துக்கு உரிமையாளரான Sergey Protosenya, தமது தற்கொலை தொடர்பில் எந்த குறிப்பும் பதிவு செய்யவில்லை என்றே முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நடாலியா மற்றும் மரியா ஆகியோர் அவர்களது படுக்கை அறைகளிலேயே கோடாரியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். பிரான்சில் தங்கியிருக்கும் இவர்களது இளவயது மகன் தமது பெற்றோர் மற்றும் சகோதரி தொடர்பில் கவலை தெரிவித்ததையடுத்து இந்த கொடூரமான காட்சியை காவல்த்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாததால், செவ்வாய்க்கிழமை காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளார் குறித்த இளைஞர். இதனையடுத்து காவல்த்துறையினர் தொடர்புடைய குடியிருப்புக்கு சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையிலேயே, Sergey Protosenya தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவரது மனைவி மற்றும் மகள் தங்களின் படுக்கை அறைகளில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்படும் என உள்ளூர் காவல்த்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.