முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு நாள் 18.05.2020 திங்கட்கிழமை அன்று ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய ஆலோசனை முன்றலில் பி.பகல் 15.00 மணி தொடக்கம் 16.00 மணிவரை நடைபெற்றது. இந் நிகழ்வில் மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர்.

பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக் கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டதுடன் படு கொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் மக்கள் மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனர்.
சிறீலங்கா அரசினால் தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்ற தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தி நீதியைப் பெற்றுத் தரவும் அனைத்துலக விசாரணையை முன்னெடுக்கவும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தரக் கோரியும் உள்ளடங்கிய மகஜர் ஐரோப்பிய ஆலோசனை பொதுச் செயலருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. அத்துடன் ஏனைய அரச அதிகாரிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கம் காணப்படுகின்ற இவ்வேளையில் மக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி இல்லாத வேளையில், காவல் துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க பத்துப்பேர் மட்டுமே மிகவும் உணர்வுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதியில் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற முழக்கத்துடன் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.





