ஸ்ரீலங்கா அரசின் சதிக் கோட்பாட்டினுள் சிக்குண்ட தமிழ் பொது வேட்பாளர்.

You are currently viewing ஸ்ரீலங்கா அரசின் சதிக் கோட்பாட்டினுள் சிக்குண்ட தமிழ் பொது வேட்பாளர்.
ஈழத் தமிழினத்தினது ‘அரசியல் தலைவிதியை’ தீர்மானிக்கவே தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்துகிறோம் எனும் கோசத்துடன் பொதுக் கட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13-ஆம் திருத்தச் சட்டத்தினுள் முடக்கப்படவுள்ள ஈழத் தமிழரின் அரசியல் பற்றிய எச்சரிக்கையாகவே இப்பதிவு அமைகிறது.
1.பொதுக் கட்டமைப்பினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஸ்ரீலங்கா அரசின் ஒற்றையாட்சி கட்டமைப்பையோ அல்லது அதன் கீழான எந்தவித அதிகாரங்களுமற்ற 13ம் திருத்தத்தையோ பொதுக் கட்டமைப்பினர் நிராகரித்திருக்கவில்லை.
2.”ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆம் திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட வேண்டும்” என தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் இடம்பெற்று விடக் கூடாது என்பதில் பொதுக்கட்டமைப்பில் உள்வாங்கப்பட்ட கட்சிகள் உறுதியாக இருந்தன.
3.ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இருந்துவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இடம்பெற்று வந்த/வரும் பேச்சு வார்த்தைகளின்போது பரிமாறப்பட்ட அரசியல் தீர்வு திட்ட யோசனைகளில் பயன்பாட்டில் இருந்து வந்த ‘தேசம்’, ‘இறைமை’, ‘சுயநிர்ணய உரிமை’ ஆகிய கருத்தாழம் மிக்க, அர்த்தம் பொதிந்த, சட்ட வலுவுடைய சொற்கள் இந்திய – மேற்கினதும் ஸ்ரீலங்கா அரசினதும் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக வேண்டுமென்றே உரிய இடங்களில் தவிர்க்கப்பட்டும் மயக்கமான முறையிலும் தெளிவற்ற வகையிலும் பொதுக்கட்டமைப்பினரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாங்கப்பட்டு அவரசஅவசரமாக தபால் மூல வாக்களிப்புக்கு முன்னைய தினமான 2024/9/3ம் திகதியே அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தனர்.
4.ஸ்ரீலங்கா அரசின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பின் முதன்மை வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாச அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தை சிங்கள பௌத்த பேரினவாதம் விரும்புகின்ற வகையில் அமுல்படுத்த தயாராக இருப்பதாக 2024/9/3ம் திகதிக்கு முன்பதாக வெளியிட்ட தத்தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அறிவித்திருந்தனர்.
5. ஆகவே ஒற்றையாட்சிகுட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தை இருக்கின்ற வகையில் அமுல்படுத்த தயாராக இருப்பதாக சிங்கள பௌத்த பேரினவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அறிவித்திருந்தபோது தமிழ் பொது வேட்பாளரை நிறுத்திய பொது கட்டமைப்பினர் 2024/9/3ம் திகதி வெளியிட்ட தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் “குறித்த ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13-ஆம் திருத்தத்தை முற்றாக நிராகரிக்கிறோம்” என அழுத்தம் திருத்தமாக அறிவித்திருக்க வேண்டும்.
6. தற்போது பொதுக் கட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் அண்மையில் இந்திய பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் தமது நிலைப்பாடாக 13ஆம் திருத்தத்தை வலியுறுத்தியுள்ள நிலையிலும் பொதுக் கட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் “ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ம் திருத்தத்தை முற்றாக நிராகரிக்கிறோம்” என்னும் தமிழ் தேசிய நிலைப்பாட்டை வலியுறுத்தாதுள்ள நிலையிலும் தற்போது ஸ்ரீலங்கா அரசின் ஜனாதிபதி தேர்தலில் முதன்மை வேட்பாளர்களாக போட்டியிடும் வேட்பாளர்களும் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளமையானது பொதுக் கட்டமைப்பினரால் நிறுத்தப்பட்டுள்ள பொது வேட்பாளரும் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13-ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த கோரியே தேர்தலில் நிற்கிறார் என்பது தெளிவாகிறது.
7.பொதுக் கட்டமைப்பினரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டதற்கு பின்பதாக பொது வேட்பாளர் அரியநேத்திரன் அண்மையின் வழங்கிய நேர்காணல் ஒன்றில் “13ம் திருத்தத்தை ஆதரிக்கும் தமிழ் தேசிய கட்சிகளும் எம்முடன் இருப்பதனால் 13ஆம் திருத்தத்தை நிராகரிக்க முடியாது” என்றும் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் “புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஒருவர் 13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் பேச வருமாறு அழைக்கும் பொழுது நாங்கள் நிச்சயம் பேச்சுவார்த்தைக்கு செல்வோம்” என்றும் தெரிவித்து வரும் கருத்துக்கள் அவதானமாக நோக்கப்பட வேண்டியவை.
8. பொதுக் கட்டமைப்பினர் முன்னிறுத்திய தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து நின்ற தமிழ் சிவில் பொது அமைப்புகள் தற்போது “ஒற்றியாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தத்தை முற்றாக நிராகரிக்கும் வகையிலும் பொதுசன வாக்கெடுப்பொன்றை கோரும் வகையிலும்” பொதுக் கட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் திருத்தப்பட வேண்டும் என்றும் கூறிக்கொண்டு “சங்குக்கு வாக்களியுங்கள்” என அறிக்கை விட்டுக்கொண்டும் இருப்பது நகைப்பிற்குரியது என்பதுடன் ஆழமான அரசியல் நோக்கமும் உடையது.
9. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ள நிலையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்தில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை போட்டியிட வைப்பதன் மூலம் தமிழர்களின் ஒற்றுமை சின்னமாக சங்கு சின்னத்தை தமிழ் மக்கள் மத்தியில் போலியாக அறிமுகப்படுத்தி ஸ்ரீலங்கா அரசினால் எதிர்காலத்தில் தமிழர் தேசத்தில் அடுத்தடுத்து நடாத்தப் படவிருக்கும் தேர்தல்களில் தமிழ்தேசிய விரோத சக்திகளை ஒன்றிணைத்து சங்கு சின்னத்தில் போட்டியிட வைப்பதே அதன் நோக்கமாகும்.
10.தமிழ் தேசிய நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்காதும் சமரசம் செய்யாதும் பயணிக்கும் அரசியல் தரப்பை தமிழ் தேசிய அரசியல் தளத்திலிருந்து நீக்கம் செய்யும் வகையில் கடந்த காலங்களில் செயற்பட்டு வந்த “வீடு” “மீன்” “குத்துவிளக்கு” சின்னங்கள் தமிழ் மக்கள் முன்னே அம்பலப்பட்டுப்போயுள்ள நிலையில் தற்போது எஜமானர்கள் “சங்கு” சின்னத்தை தமிழ் மக்கள் மத்தியில் வெள்ளோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
“சங்கறுப்பது எங்கள் குலம்,
சங்கரனார்க்கு ஏது குலம்? – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் – அரனே
உம் போல் இரந்துண்டு வாழ்வதில்லை.”
“விழிப்பே விடுதலையின் முதற்படி”
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒத்தோடிகளை நிராகரிப்போம்!
தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைகளை மறுக்கும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம்!
நடராஜர் காண்டீபன்
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments