இஸ்ரேல் முன்னெடுக்கும் போரை ஆதரிப்பதாக கூறியுள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், நாட்டில் ஹமாஸ் படைகளை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாக பதில் கூற வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் நாட்டில் பிரித்தானிய குடிமக்கள் எவரேனும் சிக்கியிருந்தால், அவர்களுக்கு உதவ அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய – இஸ்ரேல் இரட்டை குடியுரிமை கொண்ட பலர் தற்போது இஸ்ரேல் – காஸா நெருக்கடியில் சிக்கியிருப்பதாக வெளியான தகவலை அடுத்தே, ரிஷி சுனக் உதவ தயார் என அறிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள பிரதமர் சுனக், பிரித்தானிய அரசும் மக்களும் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். வடக்கு லண்டனில் உள்ள ஒரு ஜெப ஆலயத்திற்கு திங்கள்கிழமை இரவு விஜயம் செய்த நிலையில், இஸ்ரேலில் பிரித்தானிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரித்தானியாவில் உள்ள இஸ்ரேலிய மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஹமாஸ் படைகள் தீவிரவாதிகள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள சுனக், பிரித்தானிய மக்கள் ஹமாஸ் படைகளுக்கு ஆதரவளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.
எச்சரிக்கையை மீறி ஹமாஸ் படைகளை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாக பதில் கூறும் நிலை வரும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதனிடையே, சனிக்கிழமை முதல் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 770 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் 4,000 பேர் காயமடைந்ததாகவும் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், சனிக்கிழமை முதல் மேற்குக் கரையில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 100 பேர் காயங்களுடன் தப்பியதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஹமாஸ் படைகள் இஸ்ரேலிய நகரமொன்றில் கடும் தாக்குதலை தொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.