பாலஸ்தீன் , காசா மக்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிகளான ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் புதிய தலைவராக யேஹ்யா சின்வர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹமாஸ் இயக்கம், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. காசாவின் எல்லையோரத்தில் உள்ள இஸ்ரேலின் நகரங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. இரு தரப்புக்கும் இடையேயான இந்தப் போர் தொடர்ந்து வருகிறது.
இதனிடையே ஈரானில் கடந்த வாரம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனீயே கொல்லப்பட்டார். இதையடுத்து, அந்த அமைப்பின் ராணுவப் பிரிவுத் தலைவர் முகமது டேயிஃபும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. இந்நிலையில் ஹமாஸின் அரசியல் பிரிவின் புதிய தலைவராக யேஹ்யா சின்வர் நியமிக்கப்பட்டுள்ளார்.
யேஹ்யா சின்வர் பொதுவெளிகளில் அதிகம் தோன்றாவிட்டாலும், ஹமாஸ் அமைப்பின் நிர்வாகத்தின் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அமைப்பின் ராணுவப் பிரிவை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.