பாதுகாப்பு அதிகாரிகளை கொலை செய்ததற்காக ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் இரண்டு பேருக்கு ஈரான் அரசாங்கம் இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த செப்டம்பர் மாதம் 13ம் திகதி குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி என்ற 22 வயது பெண்ணை ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று தெரிவித்து அந்த நாட்டின் அறநெறி பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரை காவல் நிலையத்தில் வைத்து பொலிஸார் தாக்கியதில், மாஷா அமினி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து ஈரானில் உள்ள பெண்கள், ஹிஜாப் அணிவதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தில் களமிறங்கினர்,
இந்த போராட்டத்தில் பொலிஸார் மீது அத்துமீறியதாக கூறி, போராட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு தூக்கு தண்டனையும் ஈரான் அரசு நிறைவேற்றி வருகிறது.
எதிர்ப்பு இயக்கம் தொடங்கியதில் இருந்து, ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக 14 பேருக்கு நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்துள்ளது.
அதனடிப்படையில் முகமது மஹ்தி கராமி மற்றும் செய்யத் முகமது ஹொசைனி ஆகியோர் இன்று காலை தூக்கிலிடப்பட்டனர்” என்று நீதித்துறை செய்தி நிறுவனம் Mizan Online தெரிவித்துள்ளது.
ஹிஜாபிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட மொஷென் ஷெகாரி என்ற நபர், பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்தியதாக தெரிவித்து அவருக்கு ஈரான் அரசு முதலில் தூக்கு தண்டனை நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.