பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 43 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தியும் ஹமாஸ் அமைப்பை அழிக்க முடியமால் இஸ்ரேல் திணறி வருகிறது.
இதற்கிடையே லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸுக்கு ஆதராவாக செயல்படும் ஹிஸ்புல்லாவை குறிவைக்கும் இஸ்ரேல் அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றது. தொடர்ந்து அடுத்த தலைவராக அறியப்பட்ட ஹாசன் ஷபிதைனி கொல்லப்பட்டார்.
எனவே தற்போது நைம் காசிம் ஹிஸ்புல்லா தலைவராகத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை நிறுத்திக்கொண்டால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் தயார் என்று அவர் தெரிவித்தார். ஆனால் அமைதி பேச்சுவார்த்தையை விரும்பாத இஸ்ரேல் ஈரான் உடனும் வம்பிழுத்து வருகிறது.
அந்நாட்டின் அணு ஆயுத தளங்களை தாக்கப்போவதாக இஸ்ரேல் மிரட்டி வருகிறது. இந்நிலையில் லெபனானின் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கிய தளபதி உயிரிழந்துள்ளார்.
தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் நாசர் பிரிகேட் ராக்கெட் பிரிவின் உயர் தளபதி ஜாபர் காதர் பவுர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான பல தாக்குதலுக்கு அவர் மூளையாக செயல்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இஸ்ரேலில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லெபனானின் கடற்கரை நகரமான பெட்ரோன் பகுதிக்குள் இஸ்ரேல் கடற்படையின் சிறப்பு கமாண்டோக்கள் தடாலடியாக நுழைந்தனர். அவர்கள் கடற்கரை அருகே உள்ள வீட்டில் பதுங்கி இருந்த ஹிஸ்புல்லா கடற்படை தளபதி இமாத் ஹமீசை கைது செய்தனர். இவர் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த உறுப்பினராகவும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.