ஹெய்ட்டியின் சிட் சோலைல் (Cite Soleil) பகுதியில் கடந்த வார இறுதியில் சுமார் 184 பேர் கொல்லப்பட்டதாக அந் நாட்டு பிரதம அமைச்சரின் அலுவலகம் கூறியது.
தாக்குதல் தொடர்பில் கூறியுள்ள தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு வலையமைப்பு (RNDDH), ஒரு உள்ளூர் கும்பல் தலைவரின் மகன் நோய்வாய்ப்பட்டு பின்னர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறியது.
சிறுவனின் மர்ம நோய்க்கு “சூனியம்” செய்யும் வயதான உள்ளூர்வாசிகளைக் குற்றம் சாட்டிய பில்லி சூனியப் பாதிரியாரிடம் கும்பலின் தலைவர் ஆலோசனை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 130 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று கூறிய ஐ.நா, வன்முறையை மேற்கொண்ட கும்பல் உயிரழந்தவர்களின் உடல்களை எரித்து கடலில் வீசியதாகவும் குறிப்பிட்டது.
இந்தக் கொலைகளுடன் ஹெய்ட்டியில் இந்த ஆண்டு வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 5 ஆயிரத்தையும் விஞ்சியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது.