ஹைதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த கூலிப்படை கும்பலைச் சேர்ந்த 13 பேரை பொதுமக்கள் தீவைத்து எரித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஹைதி ஜனாதிபதி கூலிப்படை கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டத் தொடர்ந்து அவர்களின் கை ஓங்கியது.
அதன் பின்னர் தலைநகர் போர்ட் அவ் பிரின்சின் 60 சதவீத பகுதிகளை கூலிப்படை கும்பல்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
இந்த நிலையில் தலைநகரில் ஆயுதங்களுடன் கூலிப்படை கும்பலைச் சேர்ந்த 13 பேர் சுமார் 100 பொதுமக்களால் சுற்றி வளைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் பொதுமக்களால் தாக்கப்பட்டு, பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டனர். இதில் 13 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கடந்த வாரம் கூலிப்படை கும்பல்களுக்கு இடையிலான மோதலில் 70 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெண்கள், சிறுவர்களும் அடங்குவர்.