ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அதிகம் தயாரிக்க புதின் உத்தரவு!

You are currently viewing ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அதிகம் தயாரிக்க புதின் உத்தரவு!

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்க உதவி வருகிறது.

சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்து உள்ள ரஷியா, போரில் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.

மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தி இருக்கிறது.

இதில் உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புதின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து புதின் கூறியதாவது:-

ரஷியா தனது புதிய ஓரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை போரில் சோதிக்கும். அந்த ஏவுகணைகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.

அமெரிக்க பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பிரிட்டிஷ் க்ரூஸ் ஏவுகணைகளை ரஷியாவை தாக்க உக்ரைன் பயன்படுத்தி இருக்கிறது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.

ரஷியாவிற்கு விடுக்கப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் நிலைமை மற்றும் தன்மையைப் பொறுத்து, போர் நிலைமைகள் உட்பட, இந்த சோதனைகளை நாங்கள் தொடருவோம். ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பெருமளவில் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை

ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து ஆயிரம் நாட்களை தாண்டியுள்ள நிலையிலும் சண்டை முடிவுக்கு வரவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து உக்ரைன் ரஷியா மீது அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக  உக்ரைன் மீது முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டியது.

இவ்வாறு செய்தி வந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மிட்-ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணையை உக்ரைன் பகுதி மீது செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஏவுகணை உக்ரைன் இலக்கை துல்லியமாக தாக்கி வெற்றிகரமாக அமைந்தது என புதின் தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணைக்கு ஒரேஷ்னிக் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரேஷ்னிக் அணு அல்லாத ஹைப்பர்சோனிக் கட்டமைப்பு கொண்டது. நொடிக்கு 2.5 முதல் 3 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. நவீன ஏர் பாதுகாப்பு சிஸ்டங்கள் கூட இதை தடுத்து நிறுத்த முடியாது. தடுத்து நிறுத்துவதற்கான சாத்தியம் இல்லை. இன்றைய நிலவரப்படி, இந்த ஏவுகணையை எதிர்கொள்ள எந்த வழியும் இல்லை என புதின் தெரிவித்துள்ளார்.

ரஷியாவை நோக்கி நேட்டோ நாடுகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த ஒரேஷ்னிக் சோதனை எனத் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply